கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவான நவோரியா: சிம்புதேவன் தகவல்
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'நவோரியா'. டிசிபி ட்ரீம் ஹவுஸ் மற்றும் சிம்புதேவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் விமல், அன் ஷீத்தல், ஆரி அர்ஜுன், வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல், பாலசரவணன், நிழல்கள் ரவி, தம்பி ராமையா, அப்புகுட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.இமான் இசையமைக்கிறார். படம் டிசம்பர் 18 அன்று வெளியாகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது என்கிறார் சிம்புதேவன். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது “ஏ.ஐ தொழில்நுட்பத்தை செல்போனில் பயன்படுத்துகிறோம். ஆனால், செல்போனில் இருக்கும் அந்தத் துல்லியம் இன்னும் பெரிய திரைக்கு வரவில்லை. 4கே தரத்தில் காட்சிகள் ஏ.ஐ மூலம் கிடைப்பதில்லை. இப்போதைக்கு ஆங்காங்கே சில பேட்ச் ஒர்க் பணிகளுக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. இந்த படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது. ஆங்காங்கே ஏஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம்.
இது ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படமாக அமையும். திரையரங்கிற்குள் வந்தால், நம்மை மறந்து சிரிக்கும் வகையில் நுறு சதவிகிதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த 'நவோரியா' மக்களை கவரும் என்றார்.