15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர்
ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைந்துள்ளனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர்களின் இந்தக் கூட்டணி, தற்போது கிங் படத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய பாடலின் முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது. டாடி கூல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் துள்ளலான நடனப் பாடல், ரெட்ரோ பாணியிலான பின்னணியில் இந்தப் பிரபலமான ஜோடியை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது.
ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் கான் தோன்றும் இந்தப் பாடல், போனி எம் குழுவின் உலகப் புகழ்பெற்ற டாடி கூல் பாடலைத் தற்கால பாலிவுட் இசை நுணுக்கங்களுடன் துள்ளலான தாளக் கட்டுகளுடன் இணைத்து உருவாக்கப்பட் டுள்ளது. இந்தப் பாடலில் ஷாருக்கான் தனது வழக்கமான வசீகரத்தையும் அசத்தலான நடன அசைவுகளையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், கரீனா கபூர் தனது கவர்ச்சியாலும் ஸ்டைலாலும் திரையில் இவர்களின் பழைய கெமிஸ்ட்ரியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.
சர்வதேச அளவில் வெற்றி பெற்ற அசல் பாடலை போனி எம் குழுவினர் பாடியிருந்தனர். இதனை பிராங்க் பரியன் மற்றும் ஜார்ஜ் ரேயம் ஆகியோர் எழுதியிருந்தனர். தற்போதைய புதிய பதிப்பிற்கு சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ளனர். அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் வைபவி மெர்ச்சன்ட் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ள நிலையில், குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
நாடு முழுவதிலுமிருந்து 700-க்கும் மேற்பட்ட முன்னணி கன்டென்ட் கிரியேட்டர்கள் பங்கேற்ற மெட்டா நிறுவனத்தின் முதன்மை நிகழ்வான ஹவுஸ் ஆப் இன்ஸ்டாகிராம் 2026 விழாவில் இப்பாடல் வெளியிடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிங் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வரும் நிலையில், இந்தப் புதிய பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்பாடல் தற்போது ஜீ மியூசிக் கம்பெனி மற்றும் டி-சீரிஸ் ஆகிய யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள கிங் படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்பிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.