நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணா நியமனம்
இந்தியத் திரையுலகத்தில் அந்தந்த மாநில மொழிகளின் அடிப்படையில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்னிந்திய மொழிகளில் ஒன்றுபட்ட ஆந்திர மாநில அரசு வழங்கி வந்த நந்தி விருதுகள் சிறப்பான ஒன்றாக இருந்து வந்தது.
1964ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த விருதுகள் ஆந்திர மாநிலம், தெலங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் நந்தி விருதுகள் வழங்கப்படவில்லை.
இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் நந்தி விருதுகளை மீண்டும் வழங்குவது குறித்த அரசாணையை சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு வெளியிட்டது. தற்போது விருதுகளுக்கான தேர்வுக் குழு உறுப்பினர்களையும் அறிவித்துள்ளார்கள்.
அதன்படி நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா நந்தி விருதுகள் தேர்வுக்குழுவின் தலைவர் ஆக இருப்பார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அதன் உறுப்பினர்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2012 முதல் 2025ம் ஆண்டுக்கான விருதுகள் தேர்வு செய்யப்பட உள்ளன. 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கும் விழா விஜயவாடாவிலும், 2017ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான விருதுகள் அமரவாதி அல்லது விஜயவாடாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 முதல் 2025 வரையிலான நந்தி டிவி விருதுகள் திருப்பதியில் நடைபெற உள்ளது.