உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமா - சின்னத்திரை இரண்டிலும் உச்சம் தொட்ட பிரபலங்கள்

தமிழ் சினிமா - சின்னத்திரை இரண்டிலும் உச்சம் தொட்ட பிரபலங்கள்

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை (தொலைக்காட்சி) ஆகிய இரண்டு துறைகளிலும் தடம் பதிப்பது அனைவராலும் முடியாது. அப்படி இரண்டு துறைகளிலும் தடம் பதித்து உச்சம் தொட்ட பிரபலங்களின் பட்டியலை பார்க்கலாம்.

1. சின்னத்திரை டூ சினிமா

சிவகார்த்திகேயன்

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப் போவது யாரு' போட்டியாளராக அறிமுகமாகி, பின்னர் 'அது இது எது', 'ஜோடி நம்பர் ஒன்' போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் புகழ் பெற்றார். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். டாப் ஹீரோக்களில் ஒருவராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவின் பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

சந்தானம்

விஜய் டிவியின் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் தனது நகைச்சுவையால் மக்களைக் கவர்ந்தார். பின்னர் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது கதாநாயகனாகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

விஜய் சேதுபதி

சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் டிவியில் 'பெண்' என்ற தொடரிலும், 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் 'மக்கள் செல்வன்' ஆக உயர்ந்துள்ளார்.



பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராகத் தொடங்கி, பிறகு சின்னத்திரையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் குடும்பங்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

வாணி போஜன்

'தெய்வமகள்' தொடரின் மூலம் சின்னத்திரை நயன்தாராவாகப் புகழ்பெற்று, 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் திகழ்ந்தவர். இன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் முன்னணி நடிகையாக உள்ளார்.

2. சினிமா டூ சின்னத்திரை

ராதிகா சரத்குமார்

80-கள் மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், சின்னத்திரைக்கு வந்த பிறகு 'சித்தி', 'அண்ணாமலை', 'அரசி', 'வாணி ராணி' போன்ற மெகா ஹிட் தொடர்கள் மூலம் சின்னத்திரையின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தார். ராடன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி, தொடர்ந்து பல டிவி சீரியல்களை தயாரித்து வருகிறார்.

குஷ்பு

90 களில் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்தவர். தமிழ் சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து கலக்கியதுடன், தற்போது வரை குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதற்கு பிறகு 'கல்கி', 'லட்சுமி ஸ்டோர்ஸ்' போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

கமல்ஹாசன்

இந்திய சினிமாவின் 'உலக நாயகன்' ஆக திகழும் கமல்ஹாசன், 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையேயும் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றார்.



ரம்யா கிருஷ்ணன்

வெள்ளித்திரையில் 'படையப்பா' நீலாம்பரி போன்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த இவர், சின்னத்திரையில் 'கலசம்', 'வம்சம்' போன்ற தொடர்கள் மற்றும் பல ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் வெற்றி கண்டார்.

சூர்யா, அரவிந்த்சாமி

சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி சின்னத்திரை பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

கே.பாலசந்தர்

தமிழ் சினிமாவின் 'இயக்குநர் சிகரம்' எனப் போற்றப்படும் இவர், சின்னத்திரைக்கு வந்த பின் 'ரமணி vs ரமணி', 'கையளவு மனசு', 'பிரேமி' போன்ற காலத்தால் அழியாத தரமான தொடர்களை இயக்கி சின்னத்திரையின் போக்கையே மாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !