உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காலை 6 மணி காட்சிகள், சிறிய படங்களுக்கு ஆர்வம் காட்டாத தியேட்டர்கள், ரசிகர்கள்

காலை 6 மணி காட்சிகள், சிறிய படங்களுக்கு ஆர்வம் காட்டாத தியேட்டர்கள், ரசிகர்கள்

2023ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டின் போது அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற காட்சியில் அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீது நடனமாடியதில் தவறி விழுந்து இறந்து போனார்.

அதன்பின் தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. காலை 9 மணி முதல் தான் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ்த் திரையுலகினரின் கோரிக்கையை அடுத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு காலை 6 மணி காட்சிகளை மீண்டும் நடத்துவது குறித்த அரசாணையை நவம்பர் 3ம் தேதி வெளியிட்டது.

அதன்படி ஒரு புதிய படம் வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிகளையும், தினமும் மொத்தமாக 6 காட்சிகளை நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், உள்ளூர் விடுமுறை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 6 மணி காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியான படங்களுக்கும், கடந்த வாரம் நவம்பர் 20ம் தேதி வெளியான படங்களுக்கும் ஓரிரு நாட்கள் மட்டும் காலை 6 மணி சிறப்புக் காட்சிகள் நடைபெற்றது. குறிப்பாக படம் வெளியான தினத்தில் மட்டும் பல தியேட்டர்களில் நடந்த காட்சிகள், அதற்கடுத்த சனி மற்றும் ஞாயிறு நாட்களில் சில தியேட்டர்களில் மட்டும் என குறைந்தது. வார நாட்களில் எந்தக் காட்சிகளுமே நடைபெறவில்லை.

இன்று நவம்பர் 27ம் தேதி 9 சிறிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படங்களுக்கான காலை 6 மணி காட்சிகளை நடத்த தியேட்டர்காரர்கள் முன் வரவில்லை. அது போல அந்தப் படங்களைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே, அதுவும் படம் வெளியாகும் முதல் நாளில் மட்டுமே காலை 6 மணி காட்சிகளுக்கான வரவேற்பு இருக்கிறது. இதை நவம்பர் 6 மற்றும் 20ம் தேதிகளில் வெளிவந்த படங்கள் நிரூபித்துள்ளன.

காலை 6 மணி காட்சிகளின் நிலை இவ்வளவு சீக்கிரத்தில் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !