காட்பாதர் படம் பார்த்துவிட்டு முகேஷை டென்சனாக்கிய மணிரத்னம் : உண்மையை உடைத்த சுகாசினி
90-களின் துவக்கத்தில் மலையாளத்தில் காட்பாதர் திரைப்படம் வெளியானது. சித்திக்-லால் இணைந்து இயக்கிய படத்தில் நடிகர்கள் முகேஷ், கனகா, திலகன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் வயதான பெரியவராக நடித்த என்.என். பிள்ளை என்பவர் நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது. தமிழிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் நடிகர் முகேஷ் ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் இந்த படத்தின் பிரிவியூ காட்சி திரையிடப்பட்ட போது அதை பார்ப்பதற்காக இயக்குநர்கள் கே. பாலசந்தர், மணிரத்னம் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படம் முடிந்த பிறகு பலர் தன்னை பாராட்டினாலும் மணிரத்னம் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டார். ஒருவேளை அவருக்கு படம் பிடிக்கவில்லையோ என்று இரண்டு நாளாக மன வருத்தத்தில் இருந்தேன். அதன் பிறகு நேராக அவரது மனைவி சுகாசினிக்கே போன் செய்து மணிரத்னம் இப்படி எதுவும் சொல்லாமல் சென்றது குறித்து கேட்டேன்.
அதற்கு பதில் அளித்த சுகாசினி, “ஐயோ மூன்று நாட்களாக எனக்கு இங்கே நிம்மதியே இல்லை, எப்போதுமே காட்பாதர் படத்தை பற்றிய பேச்சு தான். நீ என்னுடன் வந்து அந்த படத்தை பார். எவ்வளவு அழகான படம் அது..” என்று தொடர்ந்து அவர் பாராட்டிக் கொண்டே இருப்பதாக கூறிய சுகாசினி, மணிரத்னம் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதால் அமைதியாக வந்து விட்டார் என்கிற தகவலைக் கூற, அதன் பிறகு உற்சாகமான முகேஷ் இந்த தகவலை இயக்குநர் சித்திக் மற்றும் லாலிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.