12 வருடங்களுக்கு பிறகு உருவான நாங்கேலி இசை ஆல்பத்தில் நடித்த நிகிலா விமல்
சமீபகாலமாக நடிகைகள் சிலர் இசை ஆல்பங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சினிமாவை விட இதன் மூலம் எளிதில் ரசிகர்களிடம் ரீச் ஆகிவிடலாம் என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் பவழமல்லி ஆல்பத்தில் நடிகை கயாடு லோஹர், ரதிமா பாடலில் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றனர். இந்த நிலையில் மலையாளத்தில் உருவாகியுள்ள நாங்கேலி ரீபார்ன் என்கிற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார் நடிகை நிகிலா விமல்.
ரீபார்ன் என்பதற்கு காரணம் இருக்கிறது. கடந்த 12 வருடங்களுக்கு முன்பே இந்தப் பாடல் நாங்கேலி என்கிற பெயரில் இசை ஆல்பமாக வெளியாகி இருந்தது. கப்பெல்லா பாணியில் வெளியான முந்தைய பாடலுக்கு மாறாக இந்த புதிய வடிவத்திற்கு போக் ராக் இசை பின்னணி கொடுக்கப்பட்டுள்ளது. மனு ரமேஷன் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடிய பாடகர் விது பிரதாப் தான் இந்த பாடலையும் பாடியுள்ளார்.
பழைய வெர்ஷனில் கள்ளுக்கடை பெஞ்சுகள் மற்றும் பாட்டில்கள் தாளத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. இப்போதைய புதிய வெர்ஷனில் இசைக்குழு உறுப்பினர்கள் தங்களது வாத்தியக் கருவிகளை இசைக்கும் காட்சிகளுடன் கற்பனை கதாபாத்திரமான நாங்கேலியாக நிகிலா விமல் தோன்றுவது இந்த பாடலை இன்னும் சிறப்பாக்கி இருக்கிறது.