உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் குறித்து கூறிய கருத்துக்களால் என் படத்துக்கு சிக்கலா? நடிகர் தியான் சீனிவாசன் விளக்கம்

விஜய் குறித்து கூறிய கருத்துக்களால் என் படத்துக்கு சிக்கலா? நடிகர் தியான் சீனிவாசன் விளக்கம்

மலையாள திரை உலகில் மறைந்த சீனியர் நடிகரான சீனிவாசனின் மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன். இருவருமே இயக்குநராகவும் நடிகர்களாகவும் திரை உலகில் பயணித்து வருகின்றனர். இதில் தியான் சீனிவாசன் கலகலப்பாக பேசுகிறேன் என்கிற வகையில் பேட்டிகளிலும் பொது மேடைகளிலும் ஏதாவது பேசி அவ்வப்போது சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வார். அப்படித்தான் நடிகர் விஜய் முதல்வராக இங்கே பொறுப்பேற்ற போது கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தியான் சீனிவாசனிடம், நீங்கள் முதல்வரானால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி வைக்கப்பட்டது.

அப்போது அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நவ்யா நாயரை பார்த்து, நான் முதல்வராகும்போது நடிகை நவ்யா நாயர் சேலை கட்டி தனக்கு முன்னால் நிற்க வேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது விஜய்யையும் அவருக்கு நெருக்கமான இன்னொரு நடிகையையும் தொடர்புபடுத்தி அவர் பேசியதாக அப்போதே சர்ச்சை வெடித்தது. விஜய் ரசிகர்கள் பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் தியான் சீனிவாசன் நடித்துள்ள 'விசிட்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் ஓட விட மாட்டோம் என்று சில விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மிரட்டியதாகவும் தன்னை திட்டியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் தியான் சீனிவாசன்.

இது குறித்து அவர் கூறும்போது, இந்த விமர்சனங்களால் தனக்கு எந்த பயமும் இல்லை. ஆன்லைன் விமர்சனங்களால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை. என்னை திட்டும் இளைய தலைமுறைகளுக்கு விஜய் உடனான எனது பழைய தொடர்பு தெரிய வாய்ப்பில்லை. முதல் நாள் முதல் காட்சிகளில் விஜய் படங்களுக்கு நான் பிளாக் டிக்கெட் விற்று இருக்கிறேன். 'கில்லி' படத்தில் 'அப்படி போடு' பாடலுக்கு முதல் வரிசையில் நின்று நடனம் ஆடிய தீவிர ரசிகன் நான். என்னுடைய தேவர் படப்பிடிப்பு முதல் நாள் அன்று விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற செய்தி வந்த போது படப்பிடிப்பு தளத்தில் அனைவருடனும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியவன் நான். முன்பு ஒரு முறை என்னுடைய கல்லூரியில் விஜய்யின் படப்பிடிப்பு நடந்தபோது அதற்கு அனுமதி வாங்கி ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறேன். அது மட்டுமல்ல விஜய்யின் தந்தையுடன் தனிப்பட்ட மற்றும் குடும்ப நட்பு இருகிறது. நகைச்சுவையாக சொல்வதை மகிழ்ச்சியாக மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் தியான் சீனிவாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !