உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுமதி இன்றி தொலைபேசி எண்ணை படத்தில் பயன்படுத்தியதாக குஞ்சாக்கோ போபன் பட தயாரிப்பாளர் மீது வழக்கு

அனுமதி இன்றி தொலைபேசி எண்ணை படத்தில் பயன்படுத்தியதாக குஞ்சாக்கோ போபன் பட தயாரிப்பாளர் மீது வழக்கு

சினிமாவில் எந்த ஒரு படத்திலும் ஏதோ ஒரு கதாபாத்திரம் தங்களது மொபைல் நம்பரை இன்னொருவருக்கு கூறுவதாக காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில் கவனமாக சில எண்களை மட்டுமே கூறிவிட்டு எதிலும் முழுதாக கூற மாட்டார்கள். ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான 'ஆபீசர் ஆன் டூட்டி' படத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவரின் மொபைல் எண்ணை அவரது அனுமதி இன்றி அவருக்குத் தெரியாமல் ஒரு சிறிய காட்சியில் படத்தில் பயன்படுத்தி இருந்தனர். படம் வெளியான போது பெரிய அளவில் இதனால் அவருக்கு பிரச்சனை ஏற்படவில்லை.

அதே சமயம் நெட்பிளிக்சில் குறிப்பாக ஹிந்தி டப்பிங் வடிவத்தில் இந்த படம் வெளியான பிறகு அப்படி திரையில் காட்டப்பட்ட மொபைல் எண் ஒரு பெண்ணுடையது என தவறாக கருதிய பல பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்ந்து அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் அனுப்ப தொடங்கினர். நள்ளிரவு, அதிகாலை என வட இந்தியாவிலிருந்தும் பின்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இந்த அழைப்புகள் வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் அந்த மொபைல் நம்பருக்கு உரிமையாளர். இதனைத் தொடர்ந்து அவர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்த போதும் அங்கிருந்து அலட்சியமாக பதில் அளித்து தயாரிப்புக் குழுவிடம் கேளுங்கள் என தட்டிக் கழித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவியல் விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலைய ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !