இந்தியாவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன் : எம்மி விழாவிற்கு சென்ற விஜய்சேதுபதி பேட்டி
மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்', வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்', மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் 'இஞ்சி வெல்லம்', பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 'ஸ்லம் டாக்', தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' என பிசியாக இருக்கிறார் விஜய்சேதுபதி.
இதற்கு இடையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படுகிற எம்மி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ளார் விஜய்சேதுபதி. இந்த கவுரவத்தை பெறும் முதல் இந்திய நடிகர் விஜய்சேதுபதி தான். இந்த ஆண்டு, எம்மி விருதுகளை வழங்கும் சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் தயாரிப்பாளரும் வாரிய உறுப்பினருமான கவிதா குப்தாவின் பரிந்துரையின் பேரில், பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில நடிகை ஆண்ட்ரியா ரைஸ்பரோ உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்களுடன், தொலைக்காட்சி திரைப்படப் பிரிவின் தொகுப்பாளராக இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா சேதுபதியுடன் இந்த நிகழ்வில் இணைந்தார். பிபிசியின் 'ப்ரிசனர் 951' தொலைக்காட்சித் திரைப்படப் பிரிவின் வெற்றியாளரும் தயாரிப்பாளருமான பிலிப்பா லோத்ரோப்பிற்கு அவர் விருதை வழங்கினார்.
விழாவிற்காக அமெரிக்கா சென்றுள்ள விஜய்சேதுபதி அங்கு நிருபர்களுக்கு பேட்டிளித்துள்ளார். அந்த பேட்டியில் சர்வதேச எம்மி விருது விழாவில் கலந்துகொள்வது இதுவே எனக்கு முதல் முறை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பின் மூலம் எம்மி மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது உண்மையிலேயே பெருமையாகவும் சிறப்பாகவும் உணர வைக்கிறது. இதற்கு முன்பும் நான் நியூயார்க் வந்திருக்கிறேன். ஆனால், இந்த முறை இதற்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் அல்ல. திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ் என்றார்.
நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் குமரப்ப அண்ணாமலை, நியூயார்க் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சார்பாக நமது நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதிக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.