உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பாண்டிபஜாரில் புத்தகம் விற்ற நடிகை

பிளாஷ்பேக் : பாண்டிபஜாரில் புத்தகம் விற்ற நடிகை

அப்பா ராணுவ டாக்டர், அம்மா ராணுவ நர்ஸ். இவர்களுக்கு பிறந்தவர் ஹீரா ராஜகோபால். இந்தியா முழுக்க அப்பா பணியாற்றியதால் ஆங்காங்கே உள்ள பள்ளிகளில் படித்து 7 மொழிகளை பேசவும், எழுதவும் கற்றவர். கடைசியாக சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

படிப்பிற்கு பிறகு ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினார், பணி நேரம்போக மீதமுள்ள நேரத்தில் பாண்டிபஜார் சாலையில் புத்தகங்களை விற்றார். பின்னர் மாடலிங் துறையில் இணைந்தார். விளம்பர படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டு, பத்திரிகை விளம்பரங்களுக்கு மட்டும் போஸ் கொடுத்தார்.

இந்த விளம்பரங்களில் ஒன்றை பார்த்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், அவரது பெற்றோர்களிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் காதல் காட்சியோ, நாயகன் கட்டிபிடிக்கும் காட்சியோ கடைசி வரை இல்லை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் 'இதயம்'. அந்த நடிகை ஹீரா.

ஹீரா நடித்த இரண்டாவது படமான 'நீ பாதி நான் பாதி' படத்தை வசந்த் இயக்க, கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. அதனைத் தொடர்ந்து, சரத்குமாருக்கு ஜோடியாக நான்கு படங்களில் அடுத்தடுத்து நடித்தார். மணிரத்னம் இயக்கிய 'திருடா திருடா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ராஜ் சிப்பி இயக்கிய 'அமானத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்; இதில் சஞ்சய் தத் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.

அன்றைக்கிருந்த முதன்மை ஹீரோக்கள் பலர் ஹீராவை காதலித்தனர். ஆனால் ஹீரா யாருடைய காதலையும் ஏற்கவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஒரு கட்டத்தில் திரைப்படத்துறையில் இருந்து விலகினார். திருமணமாகி செட்டிலானார். தவிர்க்க முடியாத அழுத்தங்களுக்கு அடிபணிய விரும்பாததே நான் சினிமாவில் இருந்து விலக காரணம்” என்று ஹீரா பின்னாளில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !