ஏஐ போஸ்டர்கள் மூலம் புதுக்கதையை உருவாக்காதீர்கள் : மோகன்லால் பட இயக்குனர் வேண்டுகோள்
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தொடரும். 200 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்த வெற்றி கூட்டணி தற்போது அதிமனோகரம் என்கிற படத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.. வரும் டிசம்பர் உருவாகி டிச., 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீஸாக படம் வெளியாக உள்ளது. இதில் மோகன்லால் சபரிமலையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது மட்டும்தான் இதுவரை இயக்குனரால் வெளியே சொல்லப்பட்டுள்ளது
ஆனால் சமீப நாட்களாகவே ஏஐ மூலமாக மோகன்லாலின் ரசிகர்கள் பலர் புதிது புதிதாக போஸ்டர்களை உருவாக்கி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி, “தயவு செய்து இப்படி புதிய போஸ்டர்களை உருவாக்கி படத்தின் கதை இப்படித்தான் இருக்குமோ என்று ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தை உருவாக்கி விட வேண்டாம், அதனால் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்” என்று இப்படி ஏஐ போஸ்டர்களை உருவாக்கும் நபர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.