தெலுங்கில் உருவாகும் இரண்டு 'ஹனுமான்' படங்கள் : தயாரிப்பாளர் ஒரு பக்கம், இயக்குனர் வேறொரு பக்கம்
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் 2024ல் வெளிவந்த தெலுங்குப் படம் 'ஹனுமான்'. சுமார் 40 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் 300 கோடி வசூலைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா அடுத்து 'ஜெய் ஹனுமான்' படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக 2024 ஜனவரி மாதத்திலேயே அறிவித்தார். அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் அப்படத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டார்.
'ஹனுமான்' படத்தை வெளியிட்ட நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இதனிடையே 2024ல் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'ஹனுமான்' படத்தைத் தயாரித்த பிரைஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இன்று 'ஹனுமான் 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனந்த் இயக்கும் இப்படத்தில் பாஞ்சா வைஷ்ணவ தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
'ஹனுமான்' படத்தைத் தயாரித்த நிறுவனம் ஒரு பக்கம் இன்று 'ஹனுமான் 2' படத்தின் அறிவிப்பை வெளியிட, 'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா ஏற்கெனவே 'ஜெய் ஹனுமான்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்க, இரண்டு 'ஹனுமான்' படங்களாலும் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியில் இணைந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் பிரிந்து, தனித்தனியே அடுத்தடுத்த 'ஹனுமான்' படங்களை உருவாக்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.