மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனரிடம் நடிகர் அர்ஜூன் புகார்
நடிகர் அர்ஜூன் தனது மகள் பற்றி அவதூறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அர்ஜூன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகை தான். நடிகர் தம்பி ராமைய்யாவின் மகனும், நடிகருமான உமாபதியை 2024ல் திருமணம் செய்தார்ர். இளைய மகள் அஞ்சனாவிற்கு சமீபத்தில் இத்தாலியை சேர்ந்த இஷாய் என்ற நபர் உடன் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
ஐஸ்வர்யா பற்றி சமீபகாலமாக தொடர்ந்து அவதூறு பரப்பும் செய்தி அதிகமாகி உள்ளது. குறிப்பாக கணவர் உமாபதியை பிரிந்துவிட்டார் என்று கூட செய்திகள் கிளம்பன. அதை தம்பி ராமைய்யா கண்டித்தார். தற்போது அவர் குடிப்பழக்கம் உடையவர் என்பது போன்று சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். இதை கண்டித்து அர்ஜூன் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு...
‛‛எனது மகள் அஞ்சனா திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் எனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி பல யூகங்கள் எழுந்தன. அவரது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது சொந்த முடிவுகளை எடுக்கவும், தனது சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழவும் உரிமை உண்டு. அவர் விரும்பினால், தனக்கான நேரத்தில் அவரே பேசுவார்.
ஆனால், ஒரு தந்தையாக, எனது மகள், அவரது குணநலன் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பொய்யான மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைப் பார்த்து என்னால் அமைதியாக இருக்க முடியாது. ஒருவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவோ யாருக்கும் உரிமம் வழங்குவதில்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணைக் குடிப்பழக்கம் கொண்டவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துக்களைக் கூறுவது மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
மவுனம் கண்ணியம் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அதுவே உண்மை என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பவும், பெரிதுபடுத்தவும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளிப்பதன் மூலம் நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இது ஏற்கனவே கடினமான பயணத்தை மேலும் கடினமாக்குகிறது. எந்தவொரு பெண்ணும் அதைத் தனியாக எதிர்கொள்ளவோ அல்லது தான் வாழத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறைக்காகத் தன்னை நியாயப்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை. ஒரு தந்தையாக, கண்ணியம், சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான எனது மகளின் உரிமைக்கு நான் எப்போதும் துணை நிற்பேன். இதற்குப் பொறுப்பானவர்கள் இனிமேலாவது தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கமிஷனரிடம் புகார்
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அர்ஜூன் சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.