அமிதாப், அபிஷேக்கை கொல்ல 200 பேர் தயார்: தாதாக்கள் பகிரங்க மிரட்டல்
பாலிவுட் நடிகர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மும்பை அண்டர் கிரவுண்ட் தாதாக்கள்தான். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பாலிவுட் நடிகர்கள் பலர் பணம் கொடுத்து வளர்த்து விட்டது இப்போது பெரும் அச்சுறுத்தலாக வந்துள்ளது. சமீபத்தில் சல்மான்கான் கார்மீது துப்பாக்கி சூடு நடந்தது. இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர். அமிதாப்பச்சன் தனது பிறந்த நாளில் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று காட்சி அளித்தார்.
இந்த நிலையில் 'அபிதாப் மற்றும் அபிஷேக் பச்சனை கொல்ல 200 பேர் மும்பையில் தயார் நிலையில் உள்ளனர். குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டை பயன்படுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்கள் எத்தனை குண்டு துளைக்காத அறைகளைக் கட்டினாலும், சுட்டுக் கொல்லப்படுவார்கள்' என்று லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி டில்லான் சமூக வலைதளம் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறான்.
மேலும் அந்தப் பதிவில் ''1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. விகாஸ் தாக்கூர் மற்றும் தீபக் சிங் (சமீபத்தில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள்) ஆகியோரைக் கைது செய்து இருப்பது எங்களது திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. என்று கூறியுள்ளான்.
இந்த மாதத்தில் மட்டும் அமிதாப்பச்சனுக்கு 3 முறை கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்த முறை அபிஷேக் பச்சனுக்கு சேர்த்து கொலை மிரட்டல் விடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.