உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறுபடியும் சண்டியர்… தமிழ் சினிமாவை உசுப்பேற்றிய தலைப்பு சர்ச்சைகள்!

மறுபடியும் சண்டியர்… தமிழ் சினிமாவை உசுப்பேற்றிய தலைப்பு சர்ச்சைகள்!

'பழசை மறக்கலியே பாவி மகன் நெஞ்சு துடிக்குது' என்கிற மைண்ட் வாய்ஸுடன் 23 ஆண்டுகளுக்கு முன் முடக்கப்பட்ட 'சண்டியர்' தலைப்பை தனது அடுத்த படத்துக்கு சூட்டி கமல் களமிறங்க... 'பகை பகைதான். இந்த தலைப்பில் கமல் எடுத்தால் அவர் தனது வீட்டை விட்டுகூட வெளியே வர முடியாது' என்று பழைய எதிர்ப்பாளர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குரல் முழங்க, சமூகவலைதள சண்டியர்களுக்கு அடித்துக் கொள்ள ஒரு புதிய டாபிக் கிடைத்திருக்கிறது.

தலைப்பில் என்ன இருக்கு? ஒரு கலைஞனுக்கு தான் விரும்பிய தலைப்பை வைத்துக் கொள்ளக்கூட சுதந்திரம் இல்லையா? என்று கமலுக்கு ஆதரவானவர்கள் ஆத்திரம் கொள்ள, இதுபோன்ற விஷமமான தலைப்புகள் சமூக அமைதிக்கு ஆபத்து. இது சுதந்திரம் அல்ல. வியாபார தந்திரம் என்று எதிர்தரப்பு கமல் தரப்பை சாடுகிறது.

இந்த தலைப்பு தொடர்பான பஞ்சாயத்துகள் தமிழ் சினிமாவில் இன்று நேற்றல்ல, ஜான் ஆபிரஹாம் இயக்கிய தேசிய விருது வென்ற 'அக்ரஹாரத்தில் கழுதை' காலத்திலிருந்தே இருந்துள்ளது. அவ்வகையில் 2000க்கு பிறகு தலைப்பு சர்ச்சைகளை சந்தித்த முக்கியமான 7 படங்கள்.

புதிய கீதை

2003-ம் ஆண்டு விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா படேல் நடிப்பில் கே.பி.ஜெகன் இயக்கிய திரைப்படம் 'புதிய கீதை'. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்துக்கு 'கீதை' என்றே பெயரிடப்பட்டிருந்தது. பகவத் கீதையின் தமிழ் பெயரான 'கீதை' என்ற வார்த்தையை ஒரு வணிகத் திரைப்படத்துக்குப் பயன்படுத்துவதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மிகவும் சமயோசிதமாக முடிவெடுத்த தயாரிப்பாளர் படத்தலைப்பை மாற்றுவதாகச் சொல்லி 'புதிய கீதை' என்ற பெயரில் ரிலீஸ் செய்தார். விஜய்யின் தோல்விப்படங்களுல் ஒன்று.

வசூல் ராஜா MBBS (2004)

2004ல் கமல்ஹாசன் நடிப்பில் சரண் இயக்கத்தில் வெளியான படம் இது. படத்தின் தலைப்பில் 'MBBS' என்ற மருத்துவப் படிப்பு பெயர் பயன்படுத்தப்பட்டதால், அது மருத்துவர்களை இழிவுபடுத்துவதாக கூறி இந்திய மருத்துவக் கவுன்சில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. எனினும் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட இதே தலைப்பில் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது ஹிந்தியில் வெற்றி பெற்ற முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீ-மேக் ஆகும்.

திருவிளையாடல்

தனுஷ் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவான திரைப்படம். முதலில் 'திருவிளையாடல்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது. சிவபெருமானின் திருவிளையாடல்களையும், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற 'திருவிளையாடல்' (1965) திரைப்படத்தையும் நினைவுபடுத்தும் பெயர் என்பதால் சிவாஜி சமூகப் பேரவையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.புதிய படத்தின் கதைக்கும் பழைய படத்தின் ஆன்மிகப் பின்னணிக்கும் தொடர்பில்லை என்றும் தயாரிப்பு தரப்பு கொடுத்த விளக்கம் எடுபடாமல் போகவே இறுதியில் பெயர் 'திருவிளையாடல் ஆரம்பம்' என்று மாற்றப்பட்டது.

தலைவா

இப்போது முதல்வராக இருக்கும் விஜயின் அரசியல் ஆசையை நேரடியாக வெளிப்படுத்திய முதல் படம் தலைவா. ஏஎல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படத்தின் தலைப்புடன் வந்த 'Time to Lead' (தலைமையேற்க வேண்டிய நேரம்) என்ற டேக்லைன் அப்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் இத்திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. பின்னர் அந்த டேக்லைன் மட்டும் நீக்கி ‛தலைவா' என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர்.

தெய்வத்திருமகள்[ன்]

விக்ரம் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கிய திரைப்படம். இந்தப் படத்துக்கு முதலில் 'தெய்வத்திருமகன்' என்று பெயரிடப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவரது ஆதரவாளர்கள் 'தெய்வத் திருமகன்' என்று அழைப்பதால், அந்தப் பெயரை ஒரு திரைப்படத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தேவர் இளைஞர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. விக்ரமின் வீட்டுக்கு முன்பாகவும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தயாரிப்பாளர் மோகன் நடராஜன், பெயரை மாற்ற முடிவு செய்தார். இறுதியில் 'தெய்வத் திருமகன்' என்பது 'தெய்வத் திருமகள்' ஆனது. ஒரு சிறிய எழுத்து மாற்றம் மூலம் மிகப்பெரிய தலைப்புச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கொம்பன்

இந்த தலைப்புக்கும் வில்லனாக வந்தவர் சாட்சாத் அதே புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தான். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய திரைப்படம். 'கொம்பன்' என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், படத்தின் கதை மற்றும் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திக் காட்டுவதாகவும், மற்றொரு சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் எதிர்ப்பு எழுந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தை அணுகி, படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரினார். வழக்கு விசாரணையின்போது படத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை படத்தின் வெளியீட்டைத் தடுக்க மறுக்க, படம் 2015 ஏப்ரல் மாதம் வெளியானது.

பராசக்தி

1952-ல் வெளியான சிவாஜி கணேசனின் 'பராசக்தி' தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படம். 73 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய புதிய திரைப்படத்துக்கு 'பராசக்தி' என்று பெயரிடப்பட்டபோது புதிய சர்ச்சை உருவானது. பராசக்தி என்றால் அதன் ஒரே அடையாளம் சிவாஜியாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்ப்புக்குரல்கள் கிளம்ப, அப்போதைய திமுக ஆட்சியில் மிக நெருக்கமாக இருந்த படக்குழு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, முன்னாள் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம்மிடம் அனுமதி வாங்கி அதே தலைப்பில் படத்தை ரிலீஸ் செய்தது.

இந்த பஞ்சாயத்துகளின் தொடர்ச்சியாக தற்போது லேட்டஸ்டாக ஆலமரத்தடியில் வந்து நின்று கொண்டிருப்பவர்தான் சண்டியர்.

'புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றோருக்கு கமல் வைத்த தலைப்பு டார்கெட் அல்ல. அவர்களின் டார்கெட்டே கமல்தான். இதே சண்டியர் தலைப்பில் 1995ல் 'வர்றார் சண்டியர்' என்ற தலைப்பிலும் 2014ல் வெறுமனே 'சண்டியர்' என்ற தலைப்பிலும் படங்கள் ரிலீஸானபோது இதே கிருஷ்ணசாமி எங்கே இருந்தார் ? ' என்று கமலை ஆதரிப்போர் வினா எழுப்பி வருகிறார்கள்.

ஆக இந்த தலைப்பு விவகாரம் கமலின் படம் ரிலீஸாகும் வரை அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இருந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !