நவம்பர் 13ல் 3 படங்கள் ரிலீஸ் : டிசம்பர் முடிய அறிவிக்கப்பட்டுள்ள படங்கள்
தீபாவளி பண்டிகை வெளியீடாக புதிய படங்கள் வந்தால் அதற்கடுத்த வாரம் வேறு புதிய படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், இந்த வருட தீபாவளிக்கு இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள்தான் வெளியாகின. அதனால், இந்த வாரம் நவம்பர் 13ம் தேதி மூன்று படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
'பிளாக் கோல்டு, ஜான் டோ, டைட்டானிக்' ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். அவற்றில் 'டைட்டானிக்' படம் இதற்கு முன்பும் சில முறை வெளியீடு அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப் போனது. இந்த வாரமாவது கண்டிப்பாக வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நவம்பர் 13ல் மூன்று படங்கள்தான் வருகிறது என்றாலும் நவம்பர் 20ம் தேதிக்கு 6 படங்கள் வருகிறது என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். '606, அப்பா குட்டி, ஓம், சத்தியவான் சாவித்திரி, வயலெட் கனவு, வெகுளி' ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன. நவம்பர் 27ம் தேதிக்கு, சிட்டுக்குறிஞ்சி, டெலிவரி பாய், மின்னும் ஓர் இரவு, நெல்லை பாய்ஸ், நிறம், வட மஞ்சுவிரட்டு' ஆகிய படங்கள் வர உள்ளன.
டிசம்பர் 4ம் தேதியன்று 'சேரநாட்டு யானை தந்தம், மக்கள் காவலன், டிரெயின் டிசம்பர் 11ல் 'அரிகொம்பன், க்ளிக்', டிசம்பர் 24ல் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை, ராவடி, தகப்பன்' ஆகிய படங்கள் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 18ம் தேதிக்கான படங்கள் எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், சில படங்கள் டிசம்பர் வெளியீடு என தேதி குறிப்பிடப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளன.