உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த அமிதாப்பச்சன்

பிளாஷ்பேக்: சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த அமிதாப்பச்சன்


“ஆங்கிரி மேன்”, “பிக் பி”, “ஷாஹின்ஷா ஆப் பாலிவுட்” என அன்போடும், மரியாதையோடும் கலையுலகினராலும், ரசிகர்களாலும் அழைக்கப்பட்டு வரும் ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்தான் அமிதாப்பச்சன். உலகெங்கும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை வைத்திருக்கும் இவர், ஆரம்பத்தில் ஒரு வணிக நிர்வாகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் நாடகங்களில் நடித்து, அதன் பின் வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கப் பெற்று வெற்றி நாயகனாக உருவானவர்.

பிரபல பாலிவுட் திரைக்கதாசிரியர்களான சலீம்-ஜாவீத் ஆகியோரது கதை மற்றும் திரைக்கதையில் வந்த “சஞ்ஜீர்” என்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படம்தான் இவருக்கு ஒரு மாபெரும் திருப்பத்தையும், அங்கீகாரத்தையும் தந்த திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அவ்விருவரின் கதை திரைக்கதையில், இவர் நாயகனாக நடித்து வெளிவந்த “தீவார்”, “ஷோலே”, “டான்” போன்ற திரைப்படங்கள் எல்லாம் தொடர் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களாக அமைந்து, அமிதாப்பச்சனை ஹிந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது.

அந்த வரிசையில் ஹிந்தி நடிகரும், கதாசிரியருமான காதர் கான் கதை எழுத, 1983ம் ஆண்டு வெளிவந்த “கூலி” திரைப்படமும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஒரு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்திருந்ததோடு, அவரது திரைப்பயணத்தில் மறக்க இயலாத முக்கிய இடம் பிடித்த ஒரு மைல் கல் திரைப்படமாகவும் இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான ஒரு சண்டைக் காட்சி, 1982ம் ஆண்டு பெங்களுரு பல்கலைக்கழக வளாகத்தில் படமாக்கப்பட்டு வந்தபோது, சக நடிகர் புனீத் இஸ்ஸாருடன் அமிதாப்பச்சன் மோதுவது போன்ற அந்த சண்டைக் காட்சியில், அவர் ஒரு மேஜையின் மேல் விழவேண்டியபோது நேரம் சரியாக கணிக்கப்படாததால், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, அமிதாப்பச்சனின் அடிவயிற்றுப் பகுதியில் பலத்த உள்காயம் ஏற்பட்டு, அதனால் அவர் கோமா நிலைக்குச் சென்று, மருத்துவ ரீதியாக அவர் இறந்துவிட்டார் என்ற ஒரு செய்தியும் கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டும் வந்தது.

மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நேரத்தில், அவர் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் என உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என ஏராளமானோர் அவருக்காக பிரார்த்தனைகளும் மேற்கொண்டனர். அப்போது தனது அமெரிக்கா பயணத்தைக் கூட ரத்து செய்துவிட்டு, தனது நண்பரான அமிதாப்பச்சனை உடனே காணச் சென்றிருந்தார் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி.

பலத்த காயம் ஏற்பட்டிருந்த போதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களின் கடும் பிரார்த்தனையின் பலனாக, வியக்கத்தக்க வகையில் விரைவில் குணமடைந்து, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, சிறப்பாக நடித்துக் கொடுத்திருந்தார் நடிகர் அமிதாப்பச்சன். விபத்து ஏற்பட்ட அந்த சண்டைக் காட்சியில், அவர் பாதிக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட காட்சியை மட்டும் உறைநிலைக்குக் கொண்டு வந்து, இதுதான் அவர் காயம்பட்ட காட்சி என பார்வையாளர்களுக்கு காட்டும் வண்ணம் படத்தின் இறுதியில் ஒரு குறிப்பும் இடம் பெற்றிருந்தது.

மேலும் படத்தின் இறுதிக் காட்சியில், கதைப்படி வில்லன் காதர் கானால் அமிதாப்பச்சன் சுடப்பட்டு இறப்பதாக அமைக்கப்பட்டிருந்த காட்சியை, இந்த நிகழ்விற்குப் பின் அவர் குணமடைந்து திரும்புவதாக மாற்றி அமைத்து, படத்தை இயக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் மன்மோகன் தேசாய். உயிரையே பணயமாக வைத்து அமிதாப்பச்சன் நடித்துக் கொடுத்த இந்தத் திரைப்படம் பல இடர்பாடுகளையும் தாண்டி, 1983ம் ஆண்டு வெளிவந்து, அமிதாப்பச்சனின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக தன்னை இணைத்துக் கொண்டு, அவருக்குப் பெருமைத் தேடித் தந்த திரைப்படமாக அமைந்திருந்தது இந்தக் “கூலி” திரைப்படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !