மூக்குத்தி அம்மன் முதல் பாகம் ஓடிடியில் அறிமுகம் : இரண்டாம் பாகம் தியேட்டர்களில் அவதாரம்
தமிழ் சினிமாவில் வேறு எந்தப் பெயரிலும் வெளிவராமல் ஒரே பெயரில் நான்கு பாகங்களாக வந்தத் திரைப்படம் 'அரண்மனை'. அப்படத்தின் நான்கு பாகங்களையும் இயக்கியவர் சுந்தர் சி. பக்தி மற்றும் பேய்ப் படங்களை நகைச்சுவை கலந்து தனது பாணியில் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படம் நாளை மறுதினம் நவம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. அதை இயக்கியவர் ஆர்ஜே பாலாஜி. அப்பாகத்தை தான் இயக்கவில்லை என்றாலும் அதன் இரண்டாம் பாகமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி.
முதல் பாகம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானதால் அதற்கான வசூல் என்பதைக் குறிப்பிட முடியாது. ஆனால், படம் ஓடிடி தளத்தில் வெகுவாகப் பார்த்து ரசிக்கப்பட்ட படமாக அமைந்தது. இரண்டாம் பாகம் தியேட்டர்களில் வெளியாவதால் அதன் வசூல் எப்படி இருக்கப் போகிறது என்பதை திரையுலகினரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த இரண்டாம் பாகப் படத்தின் முன்பதிவு தற்போதுதான் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 'இராமாயணம்' படமும், 'சீன்' படமும் இந்தப் படத்திற்கான கடும் போட்டியாக உள்ளது. 'அம்மன்' படம் என்றால் பெண்கள்தான் அதிகம் பார்க்க வருவார்கள்.
தீபாவளிப் பண்டிகை பிஸியில் அவர்கள் இருப்பதால் இதற்கான முன்பதிவு மற்ற படங்களை விடவும் குறைவாகவே உள்ளது. தீபாவளிக்குப் பிறகுதான் இப்படத்தைப் பார்க்கும் சூழலுக்கு பெண்கள் வருவார்கள். படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் அடுத்தடுத்து 'அரண்மனை' படம் போல இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை சுந்தர் சி இயக்குவார் என எதிர்பார்க்கலாம்.
ஓடிடியில் அறிமுகமான மூக்குத்தி அம்மன், தியேட்டர்களில் எடுக்கப் போகும் அவதாரத்தைப் பார்க்கத் திரையுலகினரும் ஆர்வமாக உள்ளார்கள்.