கடவுள் ஆட்டோவில் வரமாட்டார் ; மனிதநேயத்தை வலியுறுத்தி மம்முட்டி பேச்சு
நடிகர் மம்முட்டி ஒரு பக்கம் சினிமா மற்றும் பிற தொழில்களில் தாராளமாகச் சம்பாதித்தாலும், தான் நடத்தி வரும் அறக்கட்டளை மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மம்முட்டி பேசும்போது, மனிதர்களின் துன்பங்களுக்கு உதவுவதற்காகக் கடவுள் நேரில் வர மாட்டார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, கடவுள் கருணை உள்ளவர்தான்; ஆனால் கடவுள் ஒரு ஆட்டோ ரிக்சாவில் வந்து யாருக்கும் எதையும் வழங்கிவிடப் போவதில்லை.. மாறாக நம்மைப் போன்ற மனிதர்கள் மூலமாகத்தான் அவர் இரக்கத்தையும் உதவியையும் வெளிப்படுத்துகிறார். பிறருக்கு உதவுவது என்பது யாரோ வற்புறுத்துவதால் செய்வதில்லை; அது நம்மிடமிருந்து இயல்பாக வெளிப்பட வேண்டிய அன்பு. சக மனிதர்களை நேசிப்பதும் அவர்களுக்கு உதவுவதும் ஒரு மனிதனின் அடிப்படை கடமை என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது.