பஹத் பாசிலுக்காக எழுதப்பட்ட கதைதான் சூர்யா வசம் சென்றது ; இயக்குனர் ஜீத்து மாதவன்
மலையாளத்தில் 'ரோமாஞ்சம்' மற்றும் 'ஆவேசம்' என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் ஜீத்து மாதவன். குறிப்பாக பஹத் பாசிலை வைத்து அவர் இயக்கிய ஆவேசம் திரைப்படம் நகைச்சுவை கலந்த ஒரு புதிய பாணியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து மாதவன். இதில் கதாநாயகியாக நஸ்ரியாவும், முக்கிய வேடத்தில் 'பிரேமலு' புகழ் நடிகர் நஸ்லெனும் நடித்துள்ளனர். தீபாவளிக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது.
ஆனால் இந்த கதை முதலில் எழுதப்பட்டது பஹத் பாசிலுக்காகத்தான் என சமீபத்திய பேட்டியின் போது கூறியுள்ளார் ஜீத்து மாதவன். தங்களது வழக்கமான விவாதங்களின் போது பஹத் பாசிலிடம் இந்த கதையை கூறியதாகவும், அவருக்கும் அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறியுள்ள ஜீத்து மாதவன், இருந்தாலும் கதையின் போக்கை கருத்தில் கொண்டு இந்த கதையை நடிகர் சூர்யாவுக்காக மாற்றி அமைக்கலாம் என்று முடிவு செய்ததாகக் கூறினார். இது குறித்து பஹத் பாசிலிடம் கூறியபோது அவரும் அதை ஆமோதித்தார். அதன் பிறகு சூர்யாவை சந்தித்து கதை கூறியதாகவும், சூர்யாவுக்கும் அந்த கதை பிடித்துப்போனதால் அவர் இந்த படத்தில் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.