உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்தி சர்ச்சையில் எனக்கும் பங்கு இருக்கு, குற்ற உணர்வை சுமக்கிறேன் - மனம் திறந்த ஜான்வி கபூர்

பெத்தி சர்ச்சையில் எனக்கும் பங்கு இருக்கு, குற்ற உணர்வை சுமக்கிறேன் - மனம் திறந்த ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்திப் படங்களில் நடிப்பதிலிருந்து தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். 'தேவரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் அடுத்து ராம் சரண் ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்தார். அப்படத்தில் அவரது கதாபாத்திரமும், அவருக்காக அளிக்கப்பட்ட உடைகள், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிய விதம், பெண்களை அவமதிப்பு செய்வதாகவே இருந்ததாக படம் வெளியான பின் சர்ச்சை எழுந்தது. இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர். அதன்பின் அப்படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா வருத்தம் தெரிவித்தார். படத்திலிருந்தும் அம்மாதிரியான காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் சொன்னார்கள்.

இந்நிலையில் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரிடம் 'பெத்தி' படத்தின் சர்ச்சை குறித்து கேள்வி கேட்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இயக்குனர் கரண் ஜோஹர்.

அதற்கு ஜான்வி கபூர், “இந்த விவகாரம் குறித்து நான் பல விஷயங்களை உணர்ந்தேன். இதைப் பற்றிப் பேசுவதற்கு நான் தயங்கியதற்குக் காரணம், அந்தப் படத்திற்காகப் பலரும் கடுமையாக உழைத்திருந்தார்கள் என்பதுதான். மேலும், இதைப் பற்றி நான் என்ன சொல்வது, உண்மையில் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை.

இந்த சர்ச்சையில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதால், அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதுபோன்ற கதைக்களம் நமது சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் தொடர்பாக, ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் என் மனசாட்சியை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், பெண்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த குற்றவுணர்வை நான் எப்போதும் சுமந்து கொண்டிருப்பேன்.

நான் இன்னும் அதிகமாகச் செயல்பட்டிருக்க முடியுமா? இன்னும் விழிப்புடன் இருந்திருக்க முடியுமா? இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக எழுப்பியிருக்க முடியுமா? நிச்சயமாக, நூறு சதவீதம் என்னால் முடிந்திருக்கும். அந்தச் சித்தரிப்பு சிக்கலானதாக இருந்ததா? பெண்களை மிகையாகப் பாலியல் ரீதியில் பண்டமாகச் சித்தரித்ததா? பாலியல் வன்கொடுமையை ஒரு கதையாடலின் வழியாக இயல்பானதாகக் காட்டியதா? ஆம். ஆனால், இனிமேல் இதுபோன்ற ஒன்று மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம்.

மேலும், இதைப் பற்றிப் பேசும்போது மற்றவர்கள் மீது பழியைச் சுமத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு நடிகையின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியும். இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதைச் செய்ய வேண்டும்; தொழில்முறையாக நடந்துகொள்ள வேண்டும்; இயக்குநரின் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அதேப்போல், ஒரு காட்சி இறுதியாகத் திரையில் எப்படித் தோன்றும் என்பதற்கான முழுமையான வடிவத்தை திரைக்கதைகள் எப்போதும் வழங்குவதில்லை. குறிப்பாக, படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் கேமரா கோணங்கள் போன்ற விவரங்கள் திரைக்கதையில் இடம்பெறுவது மிகவும் அரிது. எனவே, எனக்குத் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், அந்தக் காட்சிகள் ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களைக் குறைப்பதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டேன்.

இருந்தாலும், இந்த விவகாரத்தில் எனக்கான பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சில சலுகைகள் கிடைக்கக்கூடிய ஒரு பின்னணியில் இருந்து வருகிறேன். அந்தச் செல்வாக்கை நான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், நான் சலுகைகள் பெற்ற பின்னணியில் இருந்து வருகிறேன் என்பதற்காக எப்படியும் என்னை விமர்சிக்கத்தான் போகிறார்கள். அப்படியிருக்கும்போது, அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் பிரச்னையை இன்னும் வலுவாக எதிர்கொண்டிருக்க வேண்டும்,” என்று பதிலளித்துள்ளார்.

புச்சிபாபு சனா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி வெளிவந்தது. ஜூன் 17ம் தேதி இப்படம் 400 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !