இவங்க இல்லாமல் தங்கச்சி சென்டிமென்ட்டா... : தமிழ் சினிமாவில் தங்கை ரோலில் அசத்தியவர்கள்
தமிழ் சினிமாவில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எம்ஜிஆர்., சிவாஜி காலம் துவங்கி, இன்றைய தனுஷ், சிவகார்த்திகேயன் காலம் வரை தங்கை கேரக்டர் என்பது தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அதிலும் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்ட கதை என்றால் தங்கை கேரக்டர்களின் சென்டிமென்ட் சற்று தூக்கலாகவே இருக்கும். அப்படி தங்கை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த முக்கிய நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
சாவித்திரி
பாசமலர் (1961) : தமிழ் சினிமா வரலாற்றிலேயே அண்ணன் - தங்கை பாசத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாத் இன்றைக்கும் திகழும் ஒரு முக்கிய படம் இது. ஏ. பீம்சிங் இயக்கி இருந்தார். இதில் இடம்பெற்ற ‛மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்' பாடல் அண்ணன் - தங்கை பாசத்திற்கான அருமையான பாடல்.
விஜயகுமாரி
பச்சை விளக்கு (1964) : சிவாஜி கணேசன் - ஏ பீம்சிங் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மற்றுமொரு பா வரிசை படம் இது. தனது தங்கை சுமதி (விஜயகுமாரி) எப்படியாவது கஷ்டப்பட்டுப் படித்து ஒரு டாக்டராக வேண்டும் என்ற அண்ணனின் கதையை மையமாக வைத்து வெளியான படம் இது. தவிர சாந்தி (1965), காஞ்சித்தலைவன் (1963), கைதியின் காதலி (1963) போன்ற படங்களிலும் தங்கையாக நடித்துப் புகழ்பெற்றவர்.
ராதிகா சரத்குமார்
பாசப் பறவைகள் (1988) : சிவக்குமாரின் தங்கையாக ராதிகா நடித்திருப்பார். தன் கணவர் சாவுக்கு அண்ணன் தான் காரணம் என கோர்ட்டிற்கு செல்லும் வேடம். கொச்சி ஹனீபா இயக்கி இருந்தார். இந்த படத்தில் வரும் ‛தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே...' சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
கிழக்கு சீமையிலே (1993) : விஜயக்குமாருக்கு பாசமுள்ள தங்கையாக உருக்கமாக ராதிகா நடித்திருப்பார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதில் இடம்பெற்ற தென் கிழக்கு சீமையில பாடல் அண்ணன் - தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் உருக்கமான பாடலாக அமைந்தது.
சரண்யா மோகன்
2000-க்குப் பிந்தைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை கேரக்டரில் அதிகம் நடித்துப் பிரபலமானவர்.
ஒரு நாள் ஒரு கனவு (2005) : ஸ்ரீகாந்த்தின் தங்கையாக நடித்து க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
வேலாயுதம் (2011) : விஜய்யின் தங்கையாக 'காவேரி' கதாபாத்திரத்தில் நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
யாரடி நீ மோகினி (2008) : நயன்தாராவின் தங்கையாக நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்காலத் தமிழ் சினிமாவில் தங்கை பாச செண்டிமெண்ட் காட்சிகளுக்குப் புத்துயிர் அளித்தவர்.
நம்ம வீட்டுப் பிள்ளை (2019) : சிவகார்த்திகேயனின் தங்கையாக 'துளசி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, அண்ணன்-தங்கை செண்டிமெண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
வானம் கொட்டட்டும் (2020) : விக்ரம் பிரபுவின் தங்கையாக மங்கையர்கரசி கேரக்டரில் நடித்து அசத்தினார்.
நிவேதா தாமஸ்
குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
குருவி (2008), ஜில்லா (2014) - விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார்.