புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே 'ழகரம்' தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சூர்யா
சூர்யா '2டி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார். சில வெளிப் படங்களையும் தயாரித்துள்ளார். அவரது மனைவி ஜோதிகாவும் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளார். தற்போது 'ழகரம்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தற்போது வெளிவர உள்ள 'சீன்' படத்தை தயாரித்துள்ளார்.
ஏற்கெனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் இருக்கும்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஏன் தொடங்க வேண்டும் என்பதற்கு நேற்று துபாயில் நடந்த 'சீன்' பட விழாவில் சூர்யா விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது “'அகரம்' அறக்கட்டளையில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். சினிமாவிலும் அதுபோன்ற ஒரு முயற்சியை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் எப்போதும் குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய, வணிக ரீதியாகவும் வெற்றிபெறக்கூடிய தரமான திரைப்படங்களையே தயாரித்து வருகிறது.
ஆனால், எங்களது 'ழகரம்' தயாரிப்பு நிறுவனம் மூலமாக இதுவரை வெளிவராத புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். புதிய திறமையாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே ழகரத்தின் நோக்கம் என்றார்.