பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன் துவங்கியது
நடிகர் பஹத் பாசிலுக்கு இந்த வருட துவக்கத்தில் மலையாளத்தில் அவர் வில்லனாக நடித்த பேட்ரியாட் மற்றும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'ஓடும் குதிர சாடும் குதிர' படங்கள் ஆகியவை பெரிய வெற்றியை தரவில்லை. இந்தநிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் படம் தான் 'கராத்தே சந்திரன்'. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாக இருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'கராத்தே சந்திரன்'. ஆனால், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருந்ததால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்தப் படம் தொடங்கப் படாமலேயே தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோட்டயத்தில் இந்தப் படத்தின் சிறப்பு விழா பூஜையுடன் ஸ்விட்ச் ஆன் நிகழ்ச்சி சிறப்பாகத் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே கட்டமாக 140 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கோட்டயம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தான் இந்தப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். பஹத் பாசிலுக்குத் திருப்புமுனையாக அமைந்த 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராய் என்பவர் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இன்னும் கதாநாயகி யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் திலீஷ் போத்தன், நடிகர் பஹத் பாசில் மற்றும் கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்..