பாலிவுட் நடிகர் அமீர்கான் சகோதரர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு
மும்பை : தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கானின் சகோதரரும், நடிகருமான இம்ரான் கான் பங்கேற்ற நிலையில், வரும் 28ம் தேதிக்குள் நாட்டை விட்டு அவர் வெளியேற மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் சகோதரர் இம்ரான் கான், 43. இவரும் ஹிந்தி திரைப்படங்களில் நடத்து வருகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி கட்சியினர் மும்பையில் கடந்த 10ம் தேதி நடத்திய போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான் பங்கேற்றார்.
அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நடிகர் இம்ரான் கான் உள்ளிட்டோரை மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக பா.ஜ.,வின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் முன்னாள் எம்.பி.,யுமான கிரித் சோமையா போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இம்ரான் கான், நம் நாட்டில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க போலீசாரிடம் முன் அனுமதி பெற்றாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகர் இம்ரான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், 'அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான்கான் மீது குடியேற்ற சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 28ம் தேதிக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தது.
எனினும், மும்பை போலீசாரின் இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகர் இம்ரான் கான் முறையிட உள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.