பிளாஷ்பேக் : எம்ஜிஆர் வழக்கறிஞராக நடித்த ஒரே படம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் தனது படங்களில் வசனங்கள் குறைவாகவும், காட்சி அனுபவங்கள் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர், அதனால்தான் அவரது படங்களில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் அதிகமாக இருந்தது. கோர்ட் ரூம் டிராமா எனப்படும் வழக்கு சம்பந்தப்பட்ட படங்களை பல முறை தவிர்த்துள்ளார்.
காரணம் படம் ஒரு கோர்ட் அறைக்குள் நடக்கும், நீண்ட வசனங்கள் இருக்கும். இது தனது ரசிகர்களுக்கு பிடிக்காது என்பதால் தவிர்த்தார். என்றாலும் தனது நண்பர் சாண்டோ சின்னப்பா தேவர் கேட்டுக் கொண்டதால் அவரது தயாரிப்பில் 'நீதிக்கு பின் பாசம்' என்ற படத்தில் கோபால் சந்திரசேகர் என்ற நேர்மையான வழக்கறிஞராக நடித்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கினார். சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இதில் எம்.ஜி.ஆர் சட்டத்தையும் நீதியையும் குடும்பப் பாசத்தை விட உயர்வாக மதிக்கும் நேர்மையான வழக்கறிஞராக நடித்திருப்பார். ஒரு கொலைக் குற்றச்சாட்டில் அவரது தாயாரே (கண்ணம்பா) சிக்க வைக்கப்படும்போது, பாசப் போராட்டத்திற்கும் நீதிக்கும் இடையே போராடி, நீதிமன்றத்தில் உண்மையான குற்றவாளிகளைத் தன் வாதத் திறமையால் அம்பலப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முழுநீள கோர்ட் ரூம் டிராமா மற்றும் வழக்கறிஞர் கோட்டுடன் அவர் நடித்த ஒரே படம் இது. படம் நல்ல வரவேற்பை பெற்றது. 'தன்ரி கொடுகுல சேலன்ஞ்' என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. 'முதல் பகுதி சூப்பர் இரண்டாம் பகுதி சுமார்' என்ற வகையில் விமர்சனம் செய்யப்பட்டது.