ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்படுகிறதா 'ராமாயணா'?
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா பாகம் 1'. இப்படம் வருகிற நவம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், ராஷ்டிரபதி பவனிலும் (ஜனாதிபதி மாளிகை) திரையிடப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. நவம்பர் 5ம் தேதியன்று புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அரசியல் தலைவர்களுக்காக இப்படத்தைத் திரையிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இதுவரை சிறப்பு திரையிடலுக்கு ஜனாதிபதி மாளிகை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்கின்றனர். ஜனாதிபதி மாளிகையில் சிறப்புக் காட்சியைத் திரையிடப் பலவிதமான அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளதால், இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. படக்குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
ரிலீசுக்கு முன் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோர் இந்த சிறப்புத் திரையிடலில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் ஒரு பிரீமியர் காட்சியும், டில்லியில் முக்கியப் பிரமுகர்களுக்காக மற்றொரு பிரீமியர் காட்சியும் நடத்தப் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.