பிளாஷ்பேக்: சிங்கீதம் சீனிவாசராவ் நினைவைப் போற்றும் சினிமா சிற்பி கமல்ஹாசனின் “ராஜபார்வை”
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் வெகு சிலரில் குறிப்பிடும்படியான ஒரு திரை ஆளுமையாகப் பார்க்கப்பட்டவர்தான் மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். சினிமா மீது தீரா காதல் கொண்டிருந்த இவர், ஒரு பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்து, பின் இயக்குநர் கே வி ரெட்டியிடம் ஒரு உதவி இயக்குநராக பல தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கின்றார். அவற்றில் 1957ல் வெளிவந்த “மாயா பஜார்” திரைப்படமும் ஒன்று. 1972ல் வெளிவந்த “நீதி நிஜயிதி” என்ற தெலுங்குத் திரைப்படம்தான் இவர் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். 1974ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நாவலான “திக்கற்ற பார்வதி”யை திரைப்படமாக எடுத்து, தமிழிலும் தடம் பதித்தார் சிங்கீதம் சீனிவாசராவ்.
இவரைப் போலவே சித்தமெல்லாம் எனக்கு சினிமா ஒன்றே என கலைக்காகவே தன்னை அற்பணித்துக் கொண்டு, உலக சினிமாவோடு போட்டி போட்டு, புதுப்புது உத்திகளையும், புதுவிதமான தொழில்நுட்பங்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து, தமிழ் திரைப்படங்களின் தரத்தை உலகறியச் செய்தவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது திறன் அறிந்து, இவருக்கான படைப்புகளை உருவாக்கிய கே பாலசந்தர், கே விஸ்வநாத், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற திறன்மிகு இயக்குனர்களின் பட்டியலில் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர்தான் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். இந்த இரு கலைஞானிகளும் இணைந்து பணிபுரிந்த முதல் திரைப்படம்தான் “சொம்மோகடிதி சொக்கோகடிதி”. 1979ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் தமிழிலிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு “இரு நிலவுகள்” என்ற பெயரில் வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து கலை தாகம் கொண்ட இவ்விருவரின் கலை ஆர்வத்தில் பிறந்த “பேசும்படம்”, “அபூர்வ சகோதரர்கள்”, “மைக்கேல் மதன காம ராஜன்”, “மகளிர் மட்டும்”, “காதலா! காதலா!”, “மும்பை எக்ஸ்பிரஸ்” ஆகிய கலைப் படைப்புகளின் வரிசையில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்த திரைப்படம்தான் “ராஜபார்வை”. நடிகர் கமல்ஹாசனின் 100வது திரைப்படமாகவும், அவர் தயாரித்த முதல் திரைப்படமாகவும் வந்ததுதான் இந்த “ராஜபார்வை”. “ஹாசன் பிரதர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், கமல்ஹாசன் மற்றும் அவரது சகோதரர்களான சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த இத்திரைப்படத்தில், கமல்ஹாசனோடு இணைந்து சந்திரஹாசனும், சாருஹாசனும் நடித்துமிருந்தனர்.
பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணியை தமிழ் திரையுலகிற்கு அடையாளம் காட்டிய திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்த “ராஜபார்வை” திரைப்படம். மேலும் மறைந்த திரையுலக ஜாம்பவான் இயக்குநர் எல் வி பிரசாத் அவர்கள், இத்திரைப்படத்தில் கதையின் நாயகியான நடிகை மாதவியின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. ஒரு இளம் பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கதையின் நாயகன் கதாபாத்திரம் அமைந்திருந்ததால், இப்படத்திற்காக பிரத்யேகமாக வயலின் வாசிக்கவும் கற்றிருந்தார் நடிகர் கமல்ஹாசன்.
கண்ணதாசன், வைரமுத்து, கங்கை அமரன் ஆகியோரின் கவித்துவமிக்க வரிகளில் “அந்தி மழை பொழிகிறது”, “அழகே அழகு தேவதை”, “விழி ஓரத்து கனவு” என இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக மெட்டமைக்கப்பட்டிருந்திருந்தும், படம் வசூல் ரீதியாக தோல்வியையே சந்தித்திருந்தது. ஆனால் விமர்சன ரீதியாக ஒரு போற்றுதலுக்குரிய திரைப்படமாகவே இன்று வரை பலராலும் பார்க்கப்பட்டு, சிலாகித்து வரும் ஒரு திரைப்படமாகத்தான் இருந்து வருகின்றது இந்த “ராஜபார்வை”.
இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், நடிகர் கமல்ஹாசன் என்ற இந்த இரண்டு திரை ஆளுமைகளின் சங்கமத்தில் உருவான கலைப் படைப்புகள் எல்லாம் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும், அத்தனையும் அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு இந்த விற்பன்னர்கள் விட்டுச் செல்லும் கலைப் பொக்கிஷங்களாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் தனது நீண்ட நெடிய கலையுலகப் பயணத்தில், அவரது தலைசிறந்த திரைப்படங்கள் சிலவற்றைப் பட்டியலிடச் சொன்னால், அதில் இந்த “ராஜபார்வை”க்கு ஒரு தனியிடம் எப்போதும் உண்டு என்பது சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.