மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'தர்மன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகா மாநிலம் மைசூர், சோமநாதபுரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (செப்.,30) அதிகாலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்திருக்கும் தகவலையறிந்து, அதிகாலையிலேயே அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கோயிலில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், அங்கிருந்த ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2014ம் ஆண்டு கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையும் இதே சாமுண்டீஸ்வரி கோயிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.