பிளாஷ்பேக்: 'குணா'அபிராமி எங்கே?
கமல் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'குணா'. ஒரு பெண்ணை அதிதீவிரமாக காதலித்த ஒரு மனநோயாளியின் கதை. இந்த படத்தில் நாயகியாக நடிக்க அப்போதைய ஹீரோயின் ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் நடிக்க முடியாமல் போனது.
கதைப்படி ஹீரோயின் வட இந்திய பெண் என்பதால் அழகான ஒரு பெண்ணை தேடினார்கள். மும்பையில் உள்ள மாடல் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் கமல்ஹாசன் மற்றும் சந்தான பாரதி ஆகியோருக்கு ரோஷினியைப் பற்றிய தகவல் கிடைத்தது. ரோஷினி மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லவிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் அவரை அணுகியபோது அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அவருக்கும் ரோஷினிக்கும் இடையிலான லவ் கெமிஸ்ட்ரி வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. அக்காலகட்டத்தின் மற்ற முன்னணி நடிகைகளுடன் ஒப்பிடுகையில், ரோஷினியின் புதுமையான மற்றும் மேற்கத்திய பாணியிலான தோற்றம் கமல்ஹாசனை ஈர்த்தது. திரையில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கமல் 'அபிராமி அபிராமி' என்று உருகி உருகி காதலிக்கும் அவர், ரசிகர்களுக்கும் பேரழகியாக தெரிந்தார்.
'குணா' படத்திற்குப் பிறகு ரோஷினி சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருந்தாலும், வேறு எந்தத் திரைப்படத்திலும் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் திருமணம் செய்துகொண்டு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவும் உறுதியான தகவல் இல்லை. ரோஷினி நினைத்திருந்தால் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வந்திருக்கலாம். ஏன் அதனை தவிர்த்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.