திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிப்பு : டிவி நடிகர் சரவணன் நாயர் கைது
கேரளாவைச் சேர்ந்தவர் சரவணன் நாயர். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 'அண்ணா' என்ற தொடரில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பயிற்சி வழக்கறிஞடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி உள்ளது. வழக்கறிஞரும் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் இருவரும் கணவன் மனைவி போன்று வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் பயிற்சி வழக்கறிஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரவணன் மீது புகார் கூறியுள்ளார். அதில் சரவணன் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து தன்னோடு வாழ்ந்து வந்தாகவும், திருமணம் செய்வதாக கூறியவர் இப்போது அதற்கு மறுத்து வருவதாகவும், இதுவரை தன்னிடம் 40 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றி உள்ளதாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் நுங்கம்பாக்கத்தில் சுவாதியை கொன்றதுபோல் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுவதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார்.
புகாருடன் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் அவர் போலீசில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனை கைது சிறையில் அடைத்தனர்.