உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''நான் ராஜமவுலியை விட சீனியர்'': நடிகர் சூர்யா சொன்னது ஏன்?

''நான் ராஜமவுலியை விட சீனியர்'': நடிகர் சூர்யா சொன்னது ஏன்?


எஸ்.எஸ்.ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிக்க, பஹத் பாசில் நடிக்கும் 'டோண்ட் டிரபிள் த டிரபிள்' பட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடிகர் சூர்யா பேசியதாவது: ''இங்கே விருந்தோம்பல் என்றொரு வார்த்தை இருக்கிறது. விருந்தோம்பலை இங்கு நாம் தான் சிறப்பாக போற்றுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆந்திராவிலும் , தெலுங்கானாவிலும் நம்மை விட மிக சிறப்பாக விருந்தோம்பலை மேற்கொள்கிறார்கள். அவர்களைப் போல் நம்மால் விருந்தோம்பலை கடைபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு நம் மீது அவர்கள் நிபந்தனையற்ற அன்பை செலுத்துவார்கள்.

சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும். நாம் பிறந்ததிலிருந்து சினிமாவை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். எனக்கு இப்போது ஐம்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு சினிமாவும் புதுப்புது படங்கள்... புதுப்புது முயற்சிகள்... என நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதைப்போலத்தான், நான் இந்தத் திரைப்படத்தையும் பார்க்கிறேன். யாரும் எதிர்பார்க்காத ஒரு காம்பினேஷன். பஹத் பாசில் - ராஜமவுலி - கார்த்திகேயா- கூட்டணியில் இப்படி ஒரு திரைப்படம் உருவாகும் என நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்படி ஒரு டிரைலர். அதில் இப்படி ஒரு கதை. ஒருவர் ஒரு பேயை கடத்தி விட முடியுமா? என கற்பனை செய்ய முடியாத ஒரு விசயம் தான் கதை. கடத்திவிட்டால் என்ன ஆகும் ?, என்பதை யாராலும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நான் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பஹத் என்னை அண்ணன் என்று அழைத்து விட்டார். சந்தோஷம். நாங்கள் இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். காலை, மாலை, மதியம், இரவு, நடு இரவு என பல தருணங்களில் பேசியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஏராளமான பசுமையான நினைவுகள் இருக்கிறது.

எங்கள் இருவருக்கும் இடையே தொடக்கக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒற்றுமைகளைப் பற்றி பேசியிருக்கிறோம். தற்போது உள்ள நிலைக்காக நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை. முட்டி உடைந்து.. கால் உடைந்து.. எழுந்து நின்று... அதன் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் இருவரும் மனதார விவாதித்து இருக்கிறோம். அதற்காக அவருக்கு நன்றி.

கணக்கு போடுவோம்

நாம் அனைவரும் ஒரு கணக்கு போடுவோம். இந்த மாதிரி படம் எடுத்தால்... இவர்களுக்குப் பிடிக்கும், ஆனால் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த மாதிரி படம் எடுத்தால்... மற்றவர்களுக்கு எல்லாம் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்டவர்களுக்கு பிடிக்காதே..! என ஒரு கணக்கு வாத்தியார் போல் நிறைய கணக்குகளை போடுவோம். நடிகர்கள் எல்லாரும் ஒரு இமேஜூக்குள் சிக்கிக் கொண்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் பஹத் பாசிலிடம் இல்லை. நான் இன்னும் இந்த கணக்குகளை தப்பு தப்பாகத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். இவரைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். கதை நன்றாக இருக்கிறதா..? அதில் தன்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா..? என்பதை மட்டுமே பார்க்கிறார்.

இந்த 'கன்டன்ட்'டை ரசிகர்களுக்கு நம்மால் கரெக்டாக கொடுத்து விட முடியுமா..? என்று சிந்திக்கும் நபர்தான் பகத் பாசில். அதனால் தான் அவரால் இதுபோன்று கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிகிறது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

அவருடைய கதாபாத்திரத்திற்கு அனைத்து மொழிகளிலும் அவரே பின்னணியும் பேசி இருக்கிறார். நாமெல்லாம் ஒரு கேரக்டராக இருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் பஹத் அந்த கேரக்டராகவே இருப்பார்

எந்த ஒரு படத்திலும் ஒரு குழந்தை இருந்தால்.. அவர்கள் அந்த உலகத்தை உண்மையானதாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரம் சாரா இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை அனைவரும் ரசிக்கிறார்கள்.

குழந்தை மனம் வேண்டும்

எங்களைப் போன்று இந்த வசனத்தை இப்படி உச்சரிக்கலாமா...! அப்படி உச்சரிக்கலாமா..! என குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்தப் படத்தில் உன்னுடைய வசனம் அழகாக இயல்பாக இருக்கிறது. ஒரு இயக்குனருக்கு இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கலாம். அதில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடிக்கிறார் என்றால்... அவர்களை கையாளுவதற்கு இயக்குனருக்கு ஒரு குழந்தைக்கான மனம் வேண்டும்.

நான் என்னுடைய சின்ன வயதில் பார்த்த படங்கள் எல்லாம் இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. இப்போது நாம் ஆறு வயதிற்கு மேற்பட்ட... எட்டு வயதிற்கு மேற்பட்ட... குழந்தைகளுக்கான படங்களை வழங்குவதில்லை. இதற்கெல்லாம் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான், வால்ட் டிஸ்னி ஆகியோர் உருவாக்கும் குழந்தைகளுக்கான படங்களை காண்பிக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளும் பார்க்கக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் பெரியவர்களுக்கான குழந்தைகள் படம். இதில் எல்லா வகையான எமோஷன்களும் இருக்கிறது.

சீனியர்

திரைப்பட இயக்குனர் ஆக அறிமுகமாகி 25வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் ராஜமவுலிக்கு நன்றி. நான் திரைத்துறையில் அறிமுகமாகி 28, 29 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அவரை விட சீனியர்; எனக்கு உங்கள் படத்தில் ஒரு நாள்.. ஒரு நிமிடம்.. வருவதைப் போன்ற ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் நன்றி.

இந்திய சினிமாவை உங்களுடைய பெயர் மூலம் உலகத்திற்கு வழங்கியதற்கு நன்றி. இதனால் இங்குள்ள அனைவருக்கும் அடையாளம் கிடைத்திருக்கிறது. உங்களுடைய படங்களை இந்திய படங்கள் என்று பார்க்க வைப்பதற்காக நன்றி.

நான் ஒரு கதை சொல்கிறேன். உங்களை அமர்ந்து படம் பார்க்க வைப்பேன். உங்களுடைய நேரத்தை வீணடிக்க மாட்டேன்.. என ஒவ்வொரு ரசிகர்களையும் திரைப்படத்தை பார்க்க வைக்கின்ற உங்களுடைய திறமைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. அதனை இந்த திரைப்படத்திலும் ரசிகர்களால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இதன் காரணத்தினாலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது

வழக்கமான படங்கள் வெளியாகும் தருணத்தில் ஒரு வித்தியாசமான கன்டென்ட் ஜெயிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அதனால் இதிலும் திரை துறையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் அதேபோல் ஒரு தயாரிப்பாளர்களாக.. இந்த திரைப்படத்தை இவ்வளவுதான் விற்பனை செய்ய முடியும் என்ற அளவுகோல் உண்டு. அதனால் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதேபோல் நடிகர்களுக்கும் இந்த வட்டத்திற்குள் தான் நடிக்க முடியும் என்ற ஒரு எல்லை உண்டு. அந்த வசதியான ஒரு வட்டத்தை உடைத்திருக்கிறீர்கள். அந்த வகையிலும் நீங்கள் நடிகர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்''. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !