தனுஷ் 56, சிவகார்த்திகேயன் 27 : ஹரிஷ் கல்யாண் கனெக்ஷன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், சிவகார்த்திகேயன் தனித் தனியே நாயகர்களாக நடிக்கும் அவர்களது படங்கள் நேற்று ஒரே நாளில் ஆரம்பமாகின. சிவகார்த்திகேயன் இன்று இந்த அளவிற்கு கதாநாயகனாக வளர்ந்து நிற்பதற்கு தண்ணீர் ஊற்றியவர் தனுஷ் தான் என்பதை திரையுலகினரும் ரசிகர்களும் அறிவார்கள். நேற்று ஒரே நாளில் நடந்த அவர்களது இந்த இரண்டு படங்களின் பூஜைகளும் தற்செயலாக நடந்ததா, அல்லது ஒரே நாளில் நடத்தப்பட்டதா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.
நேற்றைய இரண்டு படங்களுக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாணின் கனெக்ஷன் ஒன்று உள்ளது. தனுஷின் 56வது படத்தை இயக்கும் தமிழரசன் பச்சமுத்து, இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த 'லப்பர் பந்து' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 2024ல் வெளிவந்த அப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயனின் 27வது படத்தை இயக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 2023ல் வெளிவந்த அப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அது மட்டுமல்லாது சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கு தேசிய விருதுகளை வென்றது.
ஹிரிஷ் கல்யாண் நடித்த படங்கள் மூலம் அறிமுகமான இயக்குனர்களின் இரண்டாவது படங்கள் நேற்று ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருவருக்குமே நேற்று தனது வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தார் ஹரிஷ். இரண்டு இயக்குனர்களும் அதற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.