பசி, அவமானம், ஏக்கம், 14 ஆண்டு காத்திருப்பு : ஹீரோ சித்து சொன்ன தகவல்
கடந்த வாரம் வந்த படங்களில் தி டார்க் ஹெவன் ஓரளவு ஓடியுள்ளது. சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் ஹீரோ சித்து பேசியது, இந்தத் தருணத்திற்காக நான் பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். சென்னை சாலி கிராமத்தில் தசரதபுரத்தில் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன். எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன். அது ஒரு பெரிய தேடல். அப்போது நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன்.
நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குனரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு. திரையரங்கு சென்று படம் பார்க்கும்போது நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் புல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும். பொறாமை இருக்காது. ஆனால் மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும். அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன.
நான் ஆசைப்பட்டது போலப் பல ஊர்களுக்கு திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது இந்த படத்தின் ஹவுஸ்புல் காட்சிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆசைப்பட்டு இருக்கிறோம். அது இப்போது நடக்கிறது என்கிறபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி.
'ஜிகர்தண்டா' படத்தில் ஒரு வசனம் வரும் சினிமா ஒரு தேவதை மாதிரி அதை மதித்தால் அது திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டு வரும் என்று''. சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஒரு ஆரம்பம் தான். ஒரு நல்லதொரு அறிமுகமாக இருந்திருக்கிறது. இந்த கொண்டாட்டத்திற்குக் காரணமாகப் பலர் இருக்கிறார்கள். ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த பட இயக்குனர் பாலாஜியை சொல்வேன். அனைவருக்கும் நன்றி என்றார்.