உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காத்திருப்பும், உழைப்பும் வெற்றிக்கான பார்முலா : தேசிய விருது பெற்ற எடிட்டர் கலைவாணன் பேட்டி

காத்திருப்பும், உழைப்பும் வெற்றிக்கான பார்முலா : தேசிய விருது பெற்ற எடிட்டர் கலைவாணன் பேட்டி

காதலும், போர்களமும் ஒரே கோட்டில் பயணிக்கும், 'அமரன்' படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர், எடிட்டர் கலைவாணன். 'தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி.

நீங்கள் கோவைக்காரரா? சினிமாவுக்கு சென்றது எப்படி?
பிறந்தது, வளர்ந்தது எல்லாமே போத்தனூர். பிளஸ்2 பொள்ளாச்சியில் படித்தேன். சினிமாவில் ஏதாவது ஒரு வேலையில் சேரலாம் என சென்னை சென்றேன்.எடிட்டர் ஏ.கே.பிரசாத் உதவியால் பிலிம் இன்ஸ்டிடியூடில் சேர்ந்தேன். எடிட்டர் ரூபனிடம் உதவியாளராக இருந்தேன். அவர் வெற்றிப் படங்கள் கொடுத்ததால், எனக்கும் பல தொடர்புகள் கிடைத்தன. இவ்வளவு வெற்றி படங்கள் கொடுப்பேன் என, கனவிலும் நினைக்கவில்லை.

அமரன் படத்திற்கு தேசிய விருது அறிவித்த போது என்ன நினைத்தீர்கள்?
முழுநேர எடிட்டராக எனக்கு அடையாளம் கொடுத்த படம் 'தும்பா'. அடுத்து சில படங்களில் வேலை செய்தேன். ஆனால், முதல் வெற்றிப்படம் அமரன். முதல் விருதே தேசிய விருதாக அமைந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

விருதுக்கு பிறகு, உங்கள் பார்வை மாறியுள்ளதா?
பெரிய பொறுப்புணர்வு வந்துள்ளது. இனி எடிட்டிங்கை கூர்ந்து கவனிப்பார்கள். காட்சிகளை துல்லியமாகவும், பிழையின்றியும் எடிட் செய்ய வேண்டும் என்ற பொறுப்பு.

ஒருபுறம் போர், ஆக்சன் காட்சி; மறுபுறம் குடும்ப உணர்வு, காதல்... இரண்டையும் எப்படி சமன் செய்தீர்கள்?
நான் உதவியாளராக பணியாற்றிய, 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்' போன்ற படங்களில் ஆக்ஷனும் இருக்கும், எமோஷனும் இருக்கும். அந்த அனுபவம்தான் உதவியது. தனியாக எந்த ஸ்டைலும் கிடையாது. கதை என்ன கேட்கிறதோ, அதற்கு ஏற்றவாறு எடிட் செய்ய வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பம் எடிட்டிங் துறையில் மாற்றம் ஏற்படுத்துமா?
அது ஒரு டெக்னாலஜி அப்கிரேட் மட்டுமே. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்கு மாற்றாக வரலாம். எடிட்டிங் பணியை முழுமையாக மாற்ற முடியாது. அது ஒரு அச்சுறுத்தல் இல்லை.

சினிமாவுக்குள் வர விரும்பும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?
செய்யும் வேலையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்தால் போதும்; அதற்கான பலன் நிச்சயம் தேடி வரும். சினிமாவை விட்டு போய்விடலாம் என நினைத்த போதுதான், 'அமரன்' வாய்ப்பு வந்தது. 'மெர்சல்' படத்தில் பணியாற்றிய போது, 'ரங்கூன்' பட புரோமோவுக்கு வேலை செய்தேன். அந்த அறிமுகத்தால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வாய்ப்பு அளித்தார்.

அடுத்த படம் என்ன?
அமரனை தொடர்ந்து கருப்பு படமும் பெரிய ஹிட். அக்.,1 ல் விஜய் சேதுபதியின் 'பத்தா' படம் ரிலீஸ். அடுத்து, தனுஷின் 'ஓம்' படத்திற்கான வேலை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !