'நந்தினி' கதாபாத்திரம் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானது : ஸ்ரேயா சரண்
மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. அதேப்போல் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆன இப்படம் அங்கும் வரவேற்பை பெற்றது. தற்போது திரிஷ்யம் 3ம் பாகம் ஹிந்தியில் ‛திரிஷ்யம் - தி கன்க்ளூஷன்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஏற்கனவே இரு பாகங்களில் நடித்த அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரணே இதிலும் தொடருகின்றனர். அபிஷேக் பதக் இயக்கியுள்ளார். அக்., 2ல் படம் ரிலீஸாகிறது.
இந்த படம் பற்றியும், அதில் நடித்த நந்தினி கதாபாத்திரம் பற்றியும் மனம் திறந்துள்ளார் ஸ்ரேயா. அவர் கூறுகையில், நந்தினி கதாபாத்திரம் எப்போதும் என் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக இருக்கும். நந்தினிக்கும் விஜய்க்கும்(அஜய் தேவ்கன்) இடையே மிக அழகான உறவுமுறை உள்ளது. அபிஷேக் இதை மிக அழகாக எழுதியுள்ளார். இரண்டாம் பாகத்திலிருந்து மூன்றாம் பாகம் வரை அவர்கள் ஒரு குழுவாக செயல்படும் விதம் சிறப்பாக இருந்தது.
முதல் பாகம் முதல் இறுதிப் பகுதி வரை ஒரு அழகான வசனம் தொடர்கிறது. 'தம் குட் தா ஹை' (அதாவது மூச்சு முட்டுகிறது) என்று பொருள். நந்தினி அனுபவிக்கும் வலி, பயம், நாளை என்ன நடக்கும் என்ற கவலை, குடும்பத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் மற்றும் தன் குழந்தைகளுக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய அனைத்தையும் அந்த ஒரு வரி விளக்குவதாக நான் உணர்கிறேன்.
இறுதிப்பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, செட்டில் கழித்த கடைசி நாள் எனக்கு நினைவிருக்கிறது. அங்கிருந்து கிளம்பும்போது, அந்த டைனிங் டேபிளை கடைசியாக ஒருமுறை பார்த்தேன். அந்த வீட்டில், அந்த மேஜையைச் சுற்றி நாங்கள் எவ்வளவு நேரத்தைச் செலவிட்டோம், எவ்வளவு காட்சிகள் படமாக்கப்பட்டன, எல்லாம் முடிந்துவிட்டதே என்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால், நான் சேகரித்த நினைவுகள், கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் அந்தத் திரைக்கதையின் நேர்த்தி ஆகியவை எப்போதும் என்னுடனேயே இருக்கும்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அஜய் தேவ்கன், ஸ்ரேயா தவிர்த்து தபு, ரஜத் கபூர், ஜெய்தீப், பிரகாஷ் ராஜ், கமலேஷ் சாவந்த், இஷிதா தத்தா மற்றும் மிருணாள் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.