'ஜெய் ஸ்ரீ ராம்' சர்ச்சையில் சிக்கிய அனசுயா பரத்வாஜ்
தெலுங்கில் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்தவர் நடிகை அனசுயா பரத்வாஜ். 'ரங்கஸ்தலம்', 'காட்பாதர்' உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். சமீபத்தில் “'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கம் இடுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல என்றும், அந்த முழக்கத்தை செய்பவர்களில் சிலர் தவறான செயல்களிலும் தனிப்பட்ட தாக்குதல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று அனசுயா கூறியதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சனாதன தர்மத்தையும் மத நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளதாக அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து இதற்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் அனசுயா பரத்வாஜ்: நான் ஒரு பக்கா இந்து, சனாதனி மற்றும் அனுமனின் தீவிர பக்தை; எனது முதல் மகனுக்கு 'அனுமன்' என்றே பெயர் வைத்துள்ளேன். என் மீது இணையத்தில் தனிப்பட்ட முறையில் வசை பாடுபவர்களையும் அவதூறு பரப்பியவர்களையும் குறித்தே நான் பேசினேன். ஆனால், என்னுடைய முழுமையான பேச்சை சிலர் எடிட் செய்து வேண்டுமென்றே திரித்து இது போன்ற வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பரப்புகின்றனர். நான் இந்து என்று உறக்கச் சொல்லிக் கொள்ளும் தைரியத்தை சனாதன தர்மம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அதேசமயம் மதம் எதுவாக இருந்தாலும் மற்றவர்களைத் துன்புறுத்துவதும் அவமதிப்பதும் தவறுதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.