உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பப் பாங்கான படங்களுக்கு கிடைத்த புத்துயிர்: ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வெற்றி விழாவில் சூர்யா பேச்சு

குடும்பப் பாங்கான படங்களுக்கு கிடைத்த புத்துயிர்: ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வெற்றி விழாவில் சூர்யா பேச்சு


வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜி, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து உலக அளவில் கடந்த இரண்டு நாட்களில் 74 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட வெற்றி விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது: ஒரு படத்தின் வெற்றியை விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே அளவிட முடியாது.. படம் முடிந்த பிறகு ஏற்படும் உரையாடல்கள், மக்கள் மனதோடு எடுத்துச் செல்லும் உணர்வுகள், அவர்களின் கண்ணீர் மற்றும் புன்னகை.. இந்த உணர்ச்சிகளையெல்லாம் ஒரு பேலன்ஸ் ஷீட்டில் (கணக்கு வழக்கில்) அடக்கிவிட முடியாது.. ​சினிமா என்பது வணிகம்தான், பணமும் மிக மிக முக்கியம்தான்.. ஆனால், இரண்டு வருடங்கள் கழித்தும் நீங்கள் பேசக்கூடிய இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான தாக்கம்தான் எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம்.

தொடக்க நாளை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் இரட்டிப்பாகி இருப்பதாக எங்களின் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூறுகிறார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு என்னுடைய பிரத்யேக நன்றிகள், ஏனென்றால் இந்த வெற்றியை நீங்கள் தான் இவ்வளவு சிறப்பானதாக்கியுள்ளீர்கள். ஆக்ஷன் திரைப்படங்கள் எப்போதும் டிரெண்டில் இருக்கும்; ஆனால் இந்தப் படம் அந்த டிரெண்டில் அமைந்தது கிடையாது. இப்படி ஒரு கதையை நம்பி நீங்கள் கொடுத்திருக்கும் இந்த ஆதரவு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது.

மனித உறவுகளுக்கு இடையேயான இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை நீங்கள் அனைவரும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.. குடும்பப் பாங்கான இந்த வகை திரைப்படங்களுக்கு மீண்டும் நீங்கள் புத்துயிர் அளித்துள்ளீர்கள்.. என்னுடைய முந்தைய திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருந்திருக்கலாம்.. ஆனால் நீங்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, 'இது ஒரு முக்கியமான திரைப்படம்' என்று கூறினீர்கள்.. ​ஆந்திரா/தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் என அனைத்து இடங்களிலிருந்தும் கிடைத்த இந்த அன்பு என்னை நெகிழ வைக்கிறது.. மிகுந்த மரியாதையுடன் கூடிய மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எனக்குக் கொடுத்துள்ளீர்கள்.. குடும்பப் படங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை மக்கள் மத்தியில் கலை வடிவில் மீண்டும் நினைவூட்டச் செய்துள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !