வெற்றி வரும், தோல்வி வரும், ஜால்ராவும் வரும்: நடிகர் கமல்ஹாசன்
சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு 'ராஜகோபுரங்கள்' என்ற தலைப்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று (ஆக.,16) நடந்து வருகிறது. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக நடிகர் கமல்ஹாசன், பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் சிலைகளை திறந்து வைத்து பேசினார்.
கமல்ஹாசன் பேசியதாவது: “பாரதிராஜா, பாக்யராஜ் இருவருடனும் பணியாற்றியவன் என்பதில் பெருமை கொள்கிறேன். மரணம் எல்லோருக்கும் நிகழக்கூடியதுதான். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த பணிகள் மிகப்பெரியவை. இருவரும் தமிழ் சினிமாவில் ஆழமாக வேர் ஊன்றியவர்கள். பாரதிராஜா தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்தவர் தோல்விகளுக்கு அஞ்சாதவர். ‛பாரதிராஜா போல ஒரு கலைஞன் இல்லை' என்று இயக்குனர் கே.பாலசந்தர் கூறுவார். அப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் பயணித்தது எனக்கு பெருமை.
வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் இருவரும் பயணித்தார்கள். பாரதிராஜா என்பவர் தனி மனிதர் அல்ல; சினிமாவில் அவர் ஒரு பெரிய குடும்பம். அவரை நான் பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். பலமுறை என் வீட்டில் வந்து படுத்துத் தூங்கியிருக்கிறார். அவரை வெறும் இயக்குனர் என்று எப்படி சொல்வது? அவர் என் குடும்பம்.
பாரதிராஜா, பாக்யராஜ் இருவருமே தமிழ் சினிமாவின் அடையாளங்கள் . அவர்கள் இருவரும் வெற்றி பெறுவதற்கு முன்பே இருவரும் சாதிப்பார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அது நடந்தது. இந்திய சினிமா உலகிலேயே அதிகமான திரைப்படங்களை தயாரிக்கிறது. அரசுகளின் உதவியுடன் சினிமாவை மேலும் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய விருதை ஒரு திரைப்படத் தொழிலாளி பெறும் நாளை நான் நேரில் காண வேண்டும். அதற்கான தொடக்கமாகத்தான் இந்த நிகழ்வை பார்க்கிறேன். பாரதிராஜாவின் திரைப்படங்களை பார்க்கும்போதே புதிய சினிமாவுக்கான சிந்தனை உருவாகும் . வழக்கமான சினிமாவுக்கு எதிராக புதிய பாதையை உருவாக்கியவை பாரதிராஜாவின் திரைப்படங்கள். இவ்வாறு அவர் பேசினார்.