உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சீதா தேவி' போன்ற தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது அத்தனை எளிதல்ல! - சாய் பல்லவி

'சீதா தேவி' போன்ற தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது அத்தனை எளிதல்ல! - சாய் பல்லவி


ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் யஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டில்லியில் இப்படத்தின் 'ராமாயணா பிரதம சங்கல்ப்' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய சாய் பல்லவி, ''எனது ஹிந்தி மொழி சரியாக இல்லை என்றால் தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சீதா தேவி போன்ற ஒரு தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. எதிர்கால மக்கள் இந்தத் திரைப்படத்தை வியந்து பார்க்கும் வகையில், தங்களது இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து படக்குழு உழைத்துள்ளது.

மேலும், என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்காக நமித் மல்ஹோத்ரா சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சீதா தேவியாக நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது நாம் தேடிப் போய் பெறும் விஷயமல்ல. நான் தியானம் செய்து, சீதா தேவியே என் மூலம் நடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். எனது எண்ணங்களை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு தூய்மையாக வைத்திருக்க முயன்றேன். இந்த சீதா கதாபாத்திரத்தின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சாய் பல்லவி.

ராமாயணா படத்தை அடுத்து தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'ஓம்' படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி, அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கப்போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !