சம்பள பாக்கி வழக்கு : இதயம் முரளி ரிலீஸ் ஆகுமா?
பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தனக்கு 8.39 கோடி சம்பள பாக்கி, அதை பட நிறுவனம் செட்டில் செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். 15 கோடி சம்பளத்தில் இவ்வளவு பாக்கி இருப்பதால் பணத்தை செட்டில் செய்யாமல் அந்த நிறுவனம் தயாரித்த இதயம் முரளி படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று கேட்டு இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயம் முரளியை தயாரித்து இயக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன், செல்வாக்கு படைத்தவர்.முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பெண் எடுத்தவர். அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறாரா என கோலிவுட்டிலும் பல கேள்விகள். பராசக்தி படத்தை முதலில் சூர்யா நடிக்க, அவர்களின் 2டி நிறுவனம் புறநானுாறு என்ற பெயரில் தயாரிக்க இருந்தது. அப்போது ஏற்பட்ட சில கோடி செலவை செட்டில் செய்து, அந்த கதையை சிவகார்த்திகேயனை வைத்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்தார். 2டி செலவு செட்டில் செய்ததை, சுதா சம்பளத்தில் கழிக்க, இந்த பிரச்னை என தகவல்.
இந்த வழக்கால் இதயம் முரளி பட ரிலீஸ் தடைபடுமா என படக்குழுவும் பதட்டத்தில் இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரனுக்கு இந்த பணம் சின்னதுதான் என்பதாலும், பேச்சுவார்த்தை நடப்பதாலும் சம்பள பிரச்னை முடிவுக்கு வரும் என தெரிகிறது. சில ஆண்டுகளாக இந்த படம் தள்ளிப்போன நிலையில், கடைசி நேரத்திலும் படத்துக்கு பிரச்னை வந்துள்ளது படக்குழுவை கவலை அடைய செய்துள்ளது.