கோர்ட் அனுமதியளித்தும் வெளியீட்டுக்கு அவகாசம் கேட்கும் 'துருவ நட்சத்திரம்'
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 9 வருடங்களுக்கு முன்பு தயாரான படம் 'துருவ நட்சத்திரம்'. நாயகனாக விக்ரமும், நாயகியாக ரிது வர்மாவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்டட் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதால், கவுதம் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்தது. தனியாக வங்கி கணக்கு தொடங்கி படத்தின் வசூலை அந்த கணக்கில் செலுத்தி கடன்தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதியை வழங்கியது. ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.
ஆனால் நீதிமன்றம் விடுத்த காலகெடுவுக்குள் படம் வெளியாகவில்லை. இதனால் படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.