புராண பின்னணியில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம்
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான 'அரவிந்த சமேத வீரராகவாகு' படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இந்த படத்தை ஹாரிகா - ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைந்து நிற்பது மாதிரியான காட்சியுடன் “ஒரே வேல், ஒரே நோக்கம், ஒரே தெய்வீக தீர்ப்பு” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் முருக கடவுளை மையமாக கொண்டது.
தற்போது இந்த படம் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவில் 'வடக்கில் பிறந்து, மையப்பகுதியில் உருப்பெற்று, தெற்கில் வழிபடப்பட்டு, இப்போது, பிரபஞ்சத்திற்கே சொந்தமாகவிருக்கும் ஒரு காவியம் இது”என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, முருக கடவுள் வடநாட்டில் பிறந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சமூகத்தின் பொது கடவுளாக இருக்கும் முருகனை வடநாட்டு கடவுளாக சித்தரிப்பதில் மத அரசியல் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.