யுடியூப்பை நிறுத்துங்கள் : தயாரிப்பாளர் பேச்சால் நடிகை நாகதுர்கா அதிர்ச்சி
சினிமா மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் ராஜா தயாரிக்கும் படம் 'லவ் ஓ லவ்'. மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி உள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். வொய்ன் பவே, பிரதீப், இணைந்து இசையமைத்துள்ளனர். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அனைவருமே இந்த படத்தில் அறிமுகமாகும் நடிகை நாகதுர்காவை புகழ்ந்தார்கள். காரணம் இவர் தெலுங்கு நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பாடகி. அதேபோல கிராமிய நடனங்களிலும் புகழ்பெற்றவர். இதற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது சமூக வலைத்தள பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். விழாவில் பேசியவர்கள் 'தமிழ் சினிமாவில் நாகதுர்கா ஒரு ரவுண்டு வருவார். அவரது பாடும் திறமை, ஆடும் திறமையை சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நாக துர்கா யுடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினால்தான் வெற்றி பெற முடியும்' என்றார். இதனால் மேடையில் இருந்த நாகதுர்கா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பேசிய சித்ரா லட்சுமணன் 'யு டியூப் மூலம்தான் நாகதுர்கா இந்த படத்தில் நடிக்கிறார், இந்த மேடையில் நிற்கிறார். தன் வளர்ச்சிக்கு காரணமான யு டியூபை அவர் எப்போதும் கைவிடக்கூடாது' என்றார். இதை கேட்ட நாகதுர்காக அவருக்கு வணக்கம் செலுத்தி நன்றி கூறினார்.