நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்
சென்னை : நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, 89, சென்னையில் இன்று(மே 30) காலை காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது தாயார் மோகினி மணி, கோல்கட்டாவை சேர்ந்த சிந்தி சமூகத்தை சேர்ந்தவர். அஜித் உடன் வசித்து வந்த அவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
தாய் இறந்த சமயத்தில் அஜித் துபாயில் இருந்தார். அன்னையின் மறைவு செய்தி கேட்டு சென்னை விரைந்துள்ளார் அஜித். கடந்த 2023ல் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். சுப்பிரமணியம் - மோகினி தம்பதியருக்கு அஜித் குமார், அனில் குமார் மற்றும் அனுப் குமார் என மூன்று மகன்கள் உள்ளனர்.
நடிகர் அஜித்தின் சென்னை, பாலவாக்கம் இல்லத்தில் மோகினியின் இறுதித்சடங்கு நடக்க உள்ளது. அஜித் தாயார் மோகினி மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாளை இறுதிச்சடங்கு
அஜித்குமார் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.