சில வருடங்களில் புஷ்பா 3 : நடிகர் ஜெகபதி பாபு தகவல்
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா'. அதன் இரண்டாம் பாகம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்து மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனிடையே, 'புஷ்பா 2' படத்தில் நடித்த நடிகர் ஜெகபதி பாபு 'புஷ்பா 3' குறித்த அப்டேட் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் கொடுத்துள்ளார்.
“மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விடவும் அடுத்த ஓரிரு வருடங்களில் புஷ்பா 3' உருவாகலாம். படத்தின் இயக்குனர் சுகுமார் மூன்றாம் பாகத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் இருக்கும் என்றார்,” எனக் கூறியுள்ளார்.
'புஷ்பா' படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கத்தில் 'ராக்கா' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு 'புஷ்பா 3' படத்தில் நடிப்பாரா என்பது பின்னர்தான் தெரியும்.