'கருப்பு' வெளியான பிறகு திரிஷாவுக்கு டப்பிங் பேசிய தகவலை வெளியிட்ட சின்மயி
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து ஒரு வழியாக மே 15ம் தேதி வெளியானது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். திரிஷாவுக்காக இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார் சின்மயி. ஏற்கனவே 'விண்ணைத்தாண்டி வருவாயா, 96' உள்ளிட்ட சில படங்களில் திரிஷாவுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். தற்போது கருப்பு படம் வெளியாகி உள்ள நிலையில், திரிஷாவிற்கு தான் டப்பிங் பேசிய தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் சின்மயி.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு வழியாக கருப்பு படத்தில் திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்திருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இதைப்பற்றி பேச எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏற்கனவே படம் பல பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில் இந்த தகவலை சொன்னால் அதன் காரணமாக கூட புதிய சிக்கல் ஏதாவது ஏற்படலாம் அல்லது படத்தில் தன்னுடைய குரலை நீக்கிவிடுவார்களோ என்கிற பயத்தில் தான் இதை முதலிலேயே தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ள சின்மயி, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மறைமுக தடையை மீறி வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் திரிஷாவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.