உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காணாமல் போன மோகன்லால் பட இயக்குனர் ; புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார்

காணாமல் போன மோகன்லால் பட இயக்குனர் ; புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார்


மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 230 கோடி வரை வசூலித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் தருண்மூர்த்தி தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து 'அதிமனோகரம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் மோகன்லால் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாடிய போது அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டார். அதாவது, இந்த 'அதிமனோகரம்' படம் முதலில் ஒரு புதிய இயக்குனரை வைத்து திட்டமிடப்பட்டது என்றும், ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அவர் காணாமல் போனார் என்றும், அவர் பயந்து போய் தங்களுடைய போன் அழைப்புகளுக்குப் பதில் அளிப்பதைத் நிறுத்திக் கொண்டார் என்றும் ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இக்கட்டான சூழ்நிலையில் தான், இயக்குனர் தருண் மூர்த்தி இந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டு தற்போது படத்தை இயக்கி வருகிறார் என்று கூறியுள்ள தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், புதுமுகங்கள் சந்திக்கும் அழுத்தத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை முழுமையாகக் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், இது போன்ற சம்பவங்கள் புதியவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !