இத்தனை நாளாக செய்யாத ஒரு விஷயத்தை 'ஐ'ம் நோபடி' படப்பிடிப்பில் செய்த பார்வதி
நடிகை பார்வதி நடிப்பில் கடந்த வருடம் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது மலையாளத்தில் 'பிரதம திருஷ்த்யகார்' மற்றும் 'ஐ'ம் நோபடி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் 'ஐ'ம் நோபடி' படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார்.
கடந்த 2018ல் வெளியான 'கூடே' படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது. மம்முட்டி நடித்த 'ரோஷாக்' படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்த போது, இத்தனை நாட்களாகப் படப்பிடிப்பு தளத்தில் செய்யாத ஒரு விஷயத்தை செய்ய வேண்டி இருந்தது என்று கூறியுள்ளார் பார்வதி.
இது குறித்து அவர் கூறும்போது, இயக்குனர் நிசாம் பஷீர் எங்களின் நடிப்புத் திறமையை பற்றிக் கவலைப்படவில்லை. உங்கள் விருப்பம் போல் நடியுங்கள் என்று சொல்லிவிட்டார். ஆனால் உடல் மொழி, உடல் அசைவுகளில் அவர் மிகத்துல்லிய கவனம் செலுத்தினார். இந்த அசைவுகள் சரியாக இருந்தால்தான் படத்தின் எடிட்டிங் மற்றும் காட்சியின் வேகம் சரியாக வரும் என அவர் கருதினார். இதனால் ஒவ்வொரு ஷாட் முடிந்த பிறகும், படப்பிடிப்பு தளத்தில் இருந்த மானிட்டரில் நான் நடித்த காட்சியை ஒவ்வொரு முறையும் பார்த்து, அதுக்கேற்றபடி அடுத்த காட்சியில் நடித்தேன்” என்று கூறியுள்ள பார்வதி இதற்கு முன்னதாக எந்த ஒரு படப்பிடிப்பிலும் தான் மானிட்டரைச் சென்று பார்த்தது இல்லை என்றும், இந்த படத்தில் அது தேவைப்பட்டதால் முதன்முதலாக மானிட்டரைப் பார்த்து நடித்தேன் என்றும் கூறியுள்ளார்.